வேலூர்: சுட்டிக்காட்டிய விகடன்.... நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் குப்பைகளை அகற்றிய அதிகாரிகள்!
வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் பகுதியை அடுத்த மேல்மொனவூர் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையின் அருகிலேயே குப்பைகள் பரவி கிடந்தன. இந்த மேல்மொனவூர் பகுதியில் உள்ள சதுப்பேரியின் கரை அருகிலேயே குப்பைகள் குவியல் குவியல்களாக சில சமூக விரோதிகளால் கொட்டப்பட்டு இருந்தது. இதனால் மேல்மொனவூர் பகுதியில் இருக்கும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையை ஒட்டி சுமார் 100 மீட்டருக்கு குப்பைகள் கொட்டப்பட்டு கிடந்தன. மேலும் இங்கு உள்ள மேல்மொனவூர் சதுப்பேரியின் ஏரி கரை அருகிலேயே மீன் கழிவுகளும் கொட்டப்பட்டு வந்தன. இதனால் அந்தப் பகுதியை கடந்து சென்றாலே துர்நாற்றம் வீசியது. இந்த பகுதியில் உள்ள குப்பைகளை சில சமூக விரோதிகள் தீயிட்டு எரிப்பதால் இந்த பகுதி புகை மண்டலமாக மாறி தேசிய நெடுஞ்சாலையில் சில விபத்துகளும் நேர்ந்து உள்ளன.

இது குறித்து கடந்த மாதம் 17 ஆம் தேதி விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தி குறிப்பில் நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், ``இந்தப் பகுதியில் எத்தனை முறை சுத்தம் செய்தாலும் இரவு நேரங்களில் சில சமூகவிரோதிகள் இங்கு குப்பைகளை கொட்டி விட்டுச் செல்கின்றனர். சில நாள்களிலேயே இந்தப் பகுதி முழுவதும் குப்பைகள் குவியல் குவியலாக வந்து குவியத் தொடங்குகின்றன. இதனை தடுக்க யாரும் உரிய முயற்சிகளை எடுக்கவில்லை. எங்கிருந்தோ எடுத்து வரும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு அது நாட்கணக்கில் இங்கு தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த பகுதியில் இருப்பவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்று கூறி இருந்தார்.
பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன்பும், நோய் தொற்று ஏற்படும் முன்பும் இங்கு பரவி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்ததை, கடந்த மாதம் 17 ஆம் தேதி விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியில் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் எப்போது இந்த குப்பைகள் அகற்றப்படும் என்று விளக்கம் கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு அவர், “மேல்மொனவூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கையை மேற்கொள்கிறோம்.

குப்பைகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கையினை வரும் காலங்களில் எடுப்போம். எங்களுடைய தூய்மை காவலர்களை கொண்டு இந்த குப்பைகளை அகற்றும் பணியினை செய்ய உள்ளோம்” என்று கூறி இருந்தார். விகடன் செய்தி எதிரொலியாக தற்போது இந்த குப்பைகள் அகற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சுமார் 100 மீட்டருக்கு மேல்மொனவூர் சர்வீஸ் சாலையில் குவியல் குவியலாக கொட்டப்பட்டு கிடந்த குப்பைகள் தற்போது அகற்றப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் கொட்டப்பட்டு கிடந்த மீன் கழிவுகள் அகற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.