திருவாரூர்: பயன்பாடற்ற நிலையில் இருக்கும் பேருந்து நிழற்குடை... அவதியுறும் பொதுமக்கள்!
திருவாரூர் தேரோடும் வீதியான வடக்கு வீதியில் உள்ள இந்த அண்ணா பேருந்து பயணிகள் நிழற்குடை, நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தையொட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமும், பொதுப்பணித்துறை அலுவலகமும், நகர காவல் நிலையம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களும், ஆசியாவின் புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் போன்ற முக்கிய வழிபாட்டு தலங்களும் உள்ளன. இந்நிலையில் தான் பயணிகள் நிழற்குடை இருந்தும் பயன்படுத்த முடியாத சூழலில் நிலவுவதாக, பள்ளிக் கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்!

இது குறித்து அந்த பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த பாஸ்கர் என்பவரிடம் கேட்டோம். நம்மிடம் பேசியவர், ``நான் மயிலாடுதுறை பேரளத்து'லருந்து இங்க உள்ள ஒரு தனியார் கடையில ஊழியம் பண்ணிட்டு வாரேன். நெதமும் இந்த அரசமரத்தடிலேயிருந்து தான் பஸ் ஏறுறேன். என்னோட சேந்து மாயவரம் போற ஸ்கூலு, காலெஜ் பசங்களும் இந்த மரத்தடி நெழலுல தான் பஸ் ஏறுவாங்க. மழை வெயில் காலத்துல இத ஒட்டுனாப்ல உள்ள டீ கடையிலையும், மளிகை கடையிலையும் அண்டி ஒண்டிக்குவோம். அந்தி பொழுது பொறந்தா போதும் ஸ்கூலு, காலெஜ் பசங்க வந்து மொச்சுடுவாங்க... அப்ப இந்த வடக்கு வீதி'யே தேர் கூட்டம் காணும்! அவ்ளோ வண்டி வாசிங்க வருச கட்டி நிக்கும். பாவம் அந்த ஒத்த போலீஸ்'னால என்ன பண்ண முடியும்...? திருவாரூர் மாவட்டத்து'ல பல மாற்றங்கள் உருவாகியும் பொதுமக்கள் பயன்பாடான இந்த பஸ்ஸ்டாண்ட்'க்கு எந்த வித மாற்றமும் இல்லை" என்று கூறினார்.

இது குறித்து திருவாரூர் நகர் மன்ற ஒன்றாவது வார்டு உறுப்பினரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக திருவாரூர் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளருமான எஸ்.கலியபெருமாளிடம் பேசினோம். ``வடக்கு வீதி பேருந்து நிலையமானது காலங்காலமாக சமூக விரோதிகளின் கூடாரமாகவும், சுகாதாரமின்றியும் கேட்பாரற்ற நிலையில் கிடக்கிறது. முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் அதுவும் நகரின் முக்கிய வீதியிலேயே இந்நிலை என்றால், மாவட்டத்தை பற்றி என்ன சொல்வது! இந்த பேருந்து நிறுத்தத்தை மறைத்து தற்போது மின்சார வாரியம் மின்சார பெட்டிகளை அமைத்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் பெரும் அச்சத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் அவ்வழியே செல்லக்கூடிய பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்காமல் செல்கிறது. மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் உடனடியாக இதில் தனி கவனம் செலுத்தி, இதற்கு தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டும். இல்லையேல் சம்பந்தப்பட்ட அலுவலகம் முன்பு இப்பிரச்னை குறித்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்பதை இதன் வாயிலாக தெரிவிக்கிறேன்" என்று கூறினார்.
இது குறித்து நகராட்சி ஆணையர் தாமோதரனிடம் பேசினோம். "இப்பேருந்து நிறுத்த விவகாரத்தில் விரைவாக தீர்வு காணப்படும்" என்று சுருக்கமாகக் கூறினார்.
பேருந்து நிறுத்தத்தில் அருகிலுள்ள மின்மாற்றி தொடர்பாக மின்சாரத்துறை செயற்பொறியாளர் செந்தமிழ்ச்செல்வியிடம் பேசினோம். ``வடக்கு வீதியில் அந்த மின்மாற்றியை சேர்த்து மொத்தம் மூன்று மின் மாற்றிகள் உள்ளன.

எனவே பழைய மின்மாற்றியை சரி செய்து அதே இடத்தில்தான் தற்போது புதிய மின்மாற்றி அமைத்துள்ளோம்" என்று கூறினார். `பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்து நிறுத்தத்தில் மின்மாற்றி அமைத்துள்ளீர்களே?' என்று நாம் கேட்ட கேள்விக்கு, பதில் சொல்லாமல் நம் அழைப்பை துண்டித்தார்!
முடிவாக அப்பேருந்து நிறுத்தத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென்பதே பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின், பொது மக்களின், அரசியல் கட்சியினரின் ஒரே கோரிக்கையாக உள்ளது!