ஹைதி: முக்கிய நகரத்தைத் தாக்கி 500 சிறைக் கைதிகளை விடுவித்த குழுக்கள்!
Sujatha Karthikeyan: விருப்ப ஓய்வு பெறும் ஒடிஷாவின் 'பவர்ஃபுல் IAS' - யார் இவர்?
ஒடிஷாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சுஜாதா கார்த்திகேயன் விருப்ப ஓய்வு பெறுகிறார்.
கடந்த மார்ச் 13ம் தேதி மத்திய அரசு அவரது விருப்ப ஓய்வுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது. ஒடிஷா அரசு தேவையான அறிவிப்பை வெளியிட அறிவுறுத்தியுள்ளது. கட்டாய 3 மாத நோட்டீஸ் பீரியடையும் தள்ளுபடி செய்துள்ளனர்.
சுஜாதா கார்த்திகேயன் ஒடிஷா அரசின் சக்திவாய்ந்த அதிகாரியாக இருந்தவர். பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய ஆலோசகரான வி.கே. பாண்டியனின் மனைவியும் கூட.
Sujatha Karthikeyan
சுஜாதா 2000ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் Political Science படித்துள்ளார். பின்னர் ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியலில் முதுநிலை பட்டம் பெற்றார்.
ஒடிஷாவில் மாவோயிஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்ட சுந்தர்கர் மாவட்டத்தில் அவரது பணி தொடங்கியது. அங்கு பல சமூக முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார். 2005ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
2006ம் ஆண்டில் சுந்தர்கர் மாவட்டத்தில் இவர் தொடங்கிய மதிய உணவில் முட்டை வழங்கும் திட்டம் பின்னாட்களில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.
சுந்தர்கரின் மாவோயிஸ்ட்டுகள் செல்வாக்குமிக்க பகுதிகளில், இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் விளையாட்டுக்கான ஆர்வத்தை உருவாக்கினார். கால் பந்தையும் ஹாக்கியையும் பிரபலப்படுத்தியதால் இவருக்கு `ஃபுட்பால் கலெக்டர்' என்ற பெயர் உண்டு.

ஒடிஷாவில் பெண்களுக்கு வலிமையூட்டும் விதமாகத் தொடங்கப்பட்ட 'மிஷன் சக்தி' திட்டத்துக்குத் தலைமை தாங்கியது இவரது முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அவரது வழிகாட்டுதலில், இந்தத் திட்டத்தின் கீழ் 70 லட்சம் பெண்கள் பயன்பெற்றனர். பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கான (SHGs) கடன் இணைப்புகள் ஏழு ஆண்டுகளில், ரூ.500 கோடியிலிருந்து ரூ.15,000 கோடியாக அதிகரித்தது.
கட்டக் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியாளராக பதவியேற்றார் சுஜாதா. அங்கு கர்ப்பமான பெண்களுக்குக்காக மம்தா என்ற பணபரிமாற்றத் திட்டத்தைத் தொடங்கினார்.
கலாச்சார செயலாளராக பணியாற்றிய சிறிய காலகட்டத்தில், புவனேஸ்வரில் முதல் உலக ஒடியா மொழி மாநாட்டை நடத்தியதில் முக்கிய பங்காற்றினார்.
2023ம் ஆண்டு இவரது கணவர் வி.கே.பாண்டியன் ஐஏஎஸ் பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். தேர்தலில் நவீன் பட்நாயக் மீது வி.கே.பாண்டியன் செல்வாக்கு செலுத்துவதாகப் பிரச்னையைக் கிளப்பியது பாஜக.

கடந்த ஆண்டு தேர்தலை ஒட்டி, சுஜாதா கார்த்திகேயன் அலுவலகப் பதவியைத் தவறாகப் பயன்படுத்துவதாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இவர் bjd கட்சியின் ஏஜென்ட் என விமர்சிக்கப்பட்டார்.
இதனால் தேர்தல் ஆணையம் அவரை அதிகாரமில்லாத பதவிக்கு மாற்ற வலியுறுத்தியது. மிஷன் சக்தியின் ஆணையர் மற்றும் செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டார் சுஜாதா.
தேர்தலில் bjd கட்சி தோல்வியைத் தழுவியதால் கட்சிக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் அழுத்தங்களை எதிர்கொண்டார் வி.கே.பாண்டியன். பின்னர் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
கடந்த ஆண்டில் 6 மாதம் குழந்தை பராமரிப்பு விடுப்பு எடுத்த சுஜாதா கார்த்திக்கேயன், தனது விடுப்பை நீட்டிக்ககோரி அளித்த விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்தது. நவம்பர் மாதம் மீண்டும் அலுவலகத்தில் இணைந்தார்.
ஓய்வு பெறுவதற்கு முன்பு ஒடிஷாவின் நிதித்துறையில் சிறப்பு செயலாளராகப் பதவி வகித்துள்ளார்.