வடிவேலுவின் கேங்கர்ஸ் டிரைலர்: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்!
`மாணவர்களுக்கு நாங்களும் தமிழ் கற்றுக்கொடுக்கிறோம்..!'- உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
தமிழக அரசு இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம் என்று உறுதியாகக் கூறி வருகிறது. ஆனால் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்க முடியாது என்று மிரட்டிக்கொண்டிருக்கிறது. தமிழகம் உட்பட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிப்பது போன்று இந்தி பேசும் மாநிலங்களில் தென்னிந்திய மொழிகளை ஏன் கற்றுக்கொடுப்பதில்லை என்று தமிழக தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதில் கொடுத்திருந்தார்.
மொழியை வைத்து பிளவை ஏற்படுத்தவேண்டாம் என்றும், ஓட்டு வங்கி குறைவதாக நினைக்கும்போது இது போன்று பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்திருந்தார். தற்போது இது தொடர்பாக அவர் புதிதாக அளித்துள்ள பேட்டியில், ''உத்தரப்பிரதேசத்தில் நாங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி கற்றுக்கொடுக்கிறோம்.

இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகிறது. குறுகிய அரசியல் லாபத்திற்காக இது போன்று மொழி சர்ச்சையை உருவாக்குபவர்கள் இதன் மூலம் தங்களது அரசியல் நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை தடுக்கின்றனர்'' என்று தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''உத்தரப்பிரதேசத்தில் எத்தனை ஆசிரியர்கள் தமிழ் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பதையும், எத்தனை மாணவர்கள் தமிழ் கற்றுக்கொள்கிறார்கள் என்பதையும் யோகி ஆதித்யநாத் தெரிவிக்கவேண்டும். உத்தரப்பிரதேசத்தில் இருந்து வேலை தேடி தமிழகத்திற்கு வரும் யாருக்கும் தமிழ் தெரிந்திருக்கவில்லை. காரணம் இல்லாமல் தமிழக மாணவர்கள் இந்தி படிக்கவேண்டிய அவசியம் இல்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.