செய்திகள் :

கச்சத்தீவு : ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்... ஆனாலும் அனல் பறந்த விவாதம் - நடந்தது என்ன?

post image

தமிழக சட்டமன்றத்தில் நெடுநாள் பிரச்னையான கச்சத்தீவு விவகாரத்தில் முதலமைச்சரின் தனித் தீர்மானம் இன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானதுக்கு பாஜக சார்பில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பேச்சு

சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "கச்சத்தீவு விவகாரத்தில் மாநில அரசுதான் இலங்கைக்கு தீவை வழங்கியதைப் போல தவறான தகவலைப் பரப்பி, அரசியல் கட்சிகள் பேசிவருவது வழக்கமாகிவிட்டது. அரசியல் ஆதாயத்துக்காக கட்சிகள் செய்யும் அதே தவறை ஒன்றிய அரசும் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கச்சத்தீவை இலங்கைக்கு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, முதலமைச்சராக இருந்த கலைஞர் அதனை எதிர்த்துள்ளார். இது தமிழக மக்களின் விருப்பங்களுக்கு மாறானது என்பதை எடுத்துக்கூறியுள்ளார். இலங்கைக்கு அளிக்கக்கூடாது என வாதிட்டுள்ளார்.

கச்சத்தீவு

அன்றைக்கு இருந்த திமுக எம்.பிக்கள் ரா.செழியன், எஸ்.எஸ்.மாரிசாமி ஆகியோர் இதனை கடுமையாக எதிர்த்துள்ளனர்.

அதையும் மீறி கச்சத்தீவு ஒப்பந்தம் 28.06.1974 அன்று கையெழுத்தானவுடன் மறுநாளே 29.06.1974 அன்று முதல்வர் கலைஞர் அனைத்துக் கட்சி கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் கூட்டி அதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி அன்றைய தினமே பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

தமிழ்நாடு அரசின், தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பை பிரதமருக்கு கலைஞர் தெரிவித்தார் என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்போதே 21.08.1994 அன்று இந்தியாவுக்கு சொந்தமானதும் தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி இந்த பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தது.

மத்திய அரசு இதைப் பரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க முயற்சி எடுத்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றியவர் கலைஞர்.

கச்சத்தீவை மீட்கவும் கச்சத்தீவில் உள்ள இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமையை நிலைநாட்டவும் தொடர்ந்து பல முயற்சிகளை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. நான் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தபோது கச்சத்தீவை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளேன்.

19.07.2023 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் வரலாற்று ரீதியாக கச்சத்தீவு இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடித்து வந்துள்ளனர். மாநில அரசின் ஒப்புதல் இன்றி கச்சத்தீவு இலங்கைக்கு மாற்றப்பட்டதனால், தமிழக மீனவர்கள் வாழ்வாதரத்தை இழந்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி, கச்சத்தீவை திரும்பபெறுவதுதான் தமிழ்நாட்டுக்கு மீனவர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்றும், அதுவரை தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பெற்றுத்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளேன்.

கச்சத்தீவு

தமிழக சட்டமன்றம் விரும்புகிறது

ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் இதுபற்றி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன். ஆனால் இதுவரை 3 முறை ஆட்சிக்கு வந்துள்ள பாஜக அரசு, கச்சத்தீவு விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.

தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது, கடும் அபராதம் விதிக்கப்படுவது போன்றவற்றில் இருந்து தமிழர்களை பாதுகாக்கவும், விரைவில் இலங்கை செல்லும் பிரதமர், தமிழ்நாடு மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாணவும், கச்சத்தீவை மீட்பதற்காக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக சட்டமன்றம் விரும்புகிறது" எனப் பேசினார்.

வானதி சீனிவாசன் ஆதரவு

தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னர் பிறகு அதுகுறித்து உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். "மீனவர்கள் நலனை மத்திய அரசு பிரித்துப்பார்க்கவில்லை. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட நாள் முதல் அது தவறென்று பாஜக கூறிவருகிறது. வரலாற்று தவறை பிரதமர் மோடியால் மட்டுமே சரி செய்ய முடியும்" என்று பேசியுள்ளார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

எடப்பாடி கேள்வி; ஸ்டாலின் பதில் கேள்வி!

இந்த தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தருவதாக அறிவித்தார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. "இது உணர்வுப்பூர்வமான பிரச்னை; நம் உரிமையை மீட்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தீர்மானத்தின் மீதான விவாதத்தில், "திமுக இந்த 4 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவு விவகாரத்தில் என்ன செய்தது? தமிழக எம்.பிக்கை 39 பேர் நாடாளுமன்றத்தில் என்ன வலியுறுத்தியுள்ளனர்? அதனை முதலமைச்சர் விளக்க வேண்டும்.

14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக என்ன செய்துள்ளது? வாஜ்பாய் அரசில் கூட அங்கம் வகித்தீர்களே அப்போது ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை" எனக் கேள்விகளையும் எழுப்பினார் எதிர்கட்சி தலைவர்.

அதற்கு, "நான் பலமுறை பிரதமரை சந்தித்தபோது வலியுறுத்தியுள்ளேன். 54 முறை கடிதம் எழுதியிருக்கிறேன். தொடர்ந்து அழுத்தம் கொடுத்திருக்கிறோம். நீங்களும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்களே அப்போது என்ன செய்தீர்கள்? இப்போது கூட டெல்லி சென்று வந்தீங்க, வலியுறுத்தப்பட்டதா?" என பதில் கேள்வி எழுப்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இறுதியில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.!

ஆளும் தரப்பு கேள்விக்கு பதில் அளிக்க எதிர்க்கட்சிகள் சார்பில் அதிமுக மீண்டும் வாய்ப்பு கேட்டது. எனினும் அது மறுக்கப்பட்டதாக வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

வக்ஃப் மசோதா : 'பாஜக-வுக்கு தேவை கடந்த காலத்தின் துர்நாற்றம்' - எம்.பி சு.வெங்கடேசன் காட்டம்

வக்ஃப் திருத்த மசோதா தாக்கல் என்ற பேச்சு எழுந்ததுமே எதிர்க்கட்சிகள் தொடங்கி பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நேற்று(ஏப்ரல்-2) கடுமையான விவாதத்திற்கு பிறகு, மக்களவையில் வக்... மேலும் பார்க்க

கழுகார் அப்டேட்ஸ் : `பெண்புள்ளி... நாகப்புள்ளி’ - மலர்க் கட்சியின் தமிழக நாற்காலி யாருக்கு?

மோதிக்கொள்ளும் கோஷ்டிகள்!பல்கலைக்கழக `பதவி’ பாலிட்டிக்ஸ்...மான்செஸ்டர் மாவட்டத்திலுள்ள ‘பசுமையான’ பல்கலைக்கழகத்தில், உச்சப் பொறுப்பில் இருந்தவரின் பதவிக்காலம் சமீபத்தில் நிறைவுபெற்றது. அவர், மீண்டும் ... மேலும் பார்க்க

TVK : ஆர்வத்தோடு விஜய்; முட்டுக்கட்டையாக நிற்கும் `பவர்புல்' அணி? - தவெகவில் என்ன நடக்கிறது?

'பனையூர் அப்டேட்!'மாதத்திற்கு ஒரு நிகழ்ச்சி என நடத்தி திடீர் பேசுபொருளாகி மறைந்து விடுகிறது தவெக. பிப்ரவரியில் ஆண்டு விழா, மார்ச்சில் பொதுக்குழுக் கூட்டம் என நடத்தி முடித்தவர்கள், இந்த மாத இறுதியில் ப... மேலும் பார்க்க