கேரளம்: வன விலங்குகள் தாக்குதலில் 344 பேர் பலி!
கேரளத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் வன விலங்குகள் தாக்குதலில் 344 பேர் பலியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வனத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் கேரளத்தில் மட்டும் 2021 - 2025 ஆண்டுகளில் 344 பேர் வன விலங்குகள் தாக்கி பலியானதாகத் தெரிவித்தார்.
இதில், 180 பேர் பாம்பு கடித்ததால் பலியானதாகவும், 103 பேர் யானைகள் தாக்கியும் 35 பேர் காட்டுப் பன்றிகள் தாக்கி பலியானதாகவும் அவர் கூறினார். 4 பேர் புலிகள் தாக்கி பலியாகியுள்ளனர்.
”மனிதர்களின் வாழ்வுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே நாம் சமநிலையைப் பேண வேண்டும். கோவையில் உள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று ஆய்வு மையத்தை மனித - விலங்கு மோதல் தொடர்பான ஆய்வு மையமாக முன்னேற்ற முடிவெடுத்துள்ளோம். யானைகளின் வழித்தடங்களை கண்காணித்து அதுபற்றி உள்ளூர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்.
மேலும், ரயில்வே துறையுடன் இணைந்து யானைகள் வழித்தடம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்” என்று அமைச்சர் பேசினார்.
காட்டுப் பன்றிகளைக் கொல்ல பாதிக்கப்பட்ட பல கிராம பஞ்சாயத்துகளுக்கு மாநில அரசின் மூலம் அதிகாரம் வழங்க மத்திய அரசு அனுமதிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
பாலக்காடு பகுதியில் பல இடங்களில் காட்டுப் பன்றிகள் மனிதர்களைத் தாக்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் வயநாடு பகுதிக்கு பார்வையிட சென்ற அமைச்சர் விலங்குகளின் தாக்குதல் தொடர்பான விவரஙகளைக்க் கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.