குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்த...
ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 7 பேர் காயம்
ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒடிசா மாநிலம், மங்குலி அருகே நிர்குன்டியில் பெங்களூரு-காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் ஞாயிற்க்கிழமை காலை 11.54 மணியளவில் தடம் புரண்டது. இந்த ரயில் பெங்களூருவிலிருந்து அசாமின் குவஹாத்தியில் உள்ள காமாக்யா நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது.
விபத்தைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ஒடிசா தீயணைப்புப் படை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. மேலும் சம்பவ இடத்திற்கு நிவாரண ரயிலும் விரைந்தது. இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஒடிசா தீயணைப்பு சேவை இயக்குநர் சுதன்சு சாரங்கி தெரிவித்தார்.
இதுகுறித்து கிழக்கு கடற்கரை ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி அசோக் குமார் மிஸ்ரா கூறுகையில், பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் இடங்களுக்குச் செல்ல உதவும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் பாதையை சீரமைப்பதே எங்கள் முன்னுரிமை, அதன்படி, மற்ற ரயில்கள் திருப்பி விடப்படும் என்றார்.
ரயில் தடம் புரண்டதால் அவ்வழியாகச் செல்லும் தௌலி எக்ஸ்பிரஸ், நீலாச்சல் எக்ஸ்பிரஸ் மற்றும் புருலியா எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று ரயில்கள் திருப்பி விடப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விபத்து தொடர்பாக விபரங்கள் அறிய 8455885999 மற்றும் 8991124238 ஆகிய உதவி எண்களும் ரயில்வேயால் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.