``திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்'' - சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், மதுரையில் கட்டப்பட்ட நூலகத்திற்கு `கலைஞர் நூற்றாண்டு நூலகம்' என்று பெயர் வைக்கப்பட்டது. இதையடுத்து கோவை, திருச்சியில் அடுத்தடுத்து நூலகங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அவ்வகையில், தற்போது திருச்சியில் 290 கோடி ரூபாய் செலவில் மாபெரும் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த திருச்சி நூலகத்திற்கு பெயர் சூட்டப்படுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து பேசியிருக்கும் மு.க. ஸ்டாலின், "கோவையில் தந்தை பெரியார், சென்னையில் பேரறிஞர் அண்ணா, மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர்களின் பெயர்களைத் தாங்கி நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளதோ, அதனைத் தொடர்ந்து, திருச்சியில் அமையவிருக்கும் நூலகத்திற்குப் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.
தமிழ்நாட்டில் கிராமங்கள்தோறும் பள்ளிகளைத் தொடங்கி, மதிய உணவு அளித்து, இலட்சக்கணக்கான குடும்பங்களின் கல்விக் கண்களைத் திறந்து, தமிழ்நாட்டின் கல்விப் புரட்சிக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திட்ட பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதி,
திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் வெளியிட வேண்டுமென்று முதலமைச்சர் என்ற முறையில் நான் கேட்டுக் கொள்கிறேன்." என்று தெரிவித்தார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
