பிசிசிஐ ஒப்பந்தம்: ரோஹித், கோலிக்கு ஏ+, ஷ்ரேயாஸ் உள்ளே, இஷான் வெளியே?
டி20 கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற இந்தியாவின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ரூ.7 கோடி மதிப்புள்ள தங்களது ஏ+ ஒப்பந்த தரத்தை மீண்டும் தக்கவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024-25ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் இல்லாத ஷ்ரேயாஸ் ஐயர் சாம்பியன்ஷிப் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார்.
கடைசியில் சேர்க்கப்பட்ட வருண் சக்கரவர்த்தியும் அசத்தலாக விளையாடினார்.
இது குறித்து ஐஏஎன்எஸுக்கு கிடைத்த தகவலின்படி:
ஓய்வு பெற்றாலும் ரோஹித், கோலி ஏ+ தரத்திலான ஒப்பந்தத்தில் நீடிக்கிறார்கள். சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் குவித்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட இஷான் கிஷன் மீண்டும் தேர்வாகவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
டி 20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியில் அசத்திய அக்ஷர் படேலுக்கு கூடுதல் மதிப்புள்ள ஒப்பந்தம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
வருண் சக்கரவர்த்தி, நிதீஷ் ரெட்டி, அபிஷேக் சர்மா கடந்த 12 மாதங்களாக சிறப்பாக விளையாடியுள்ளதால் அவர்களுக்கு முதல்முறையாக பிசிசிஐ ஒப்பந்தம் கிடைக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் மகளிர் அணிக்கான தக்கவைப்பு பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.
தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா ஆடவர் அணிக்கான ஒப்பந்தம் குறித்து சனிக்கிழமை குவஹாட்டியில் கலந்தாலோசிக்க இருந்தது தள்ளிவைக்கப்பட்டதாக ஐஏஎன்எஸ் மூலம் தகவல் அளிக்கப்பட்டது.
ஐபிஎல் முடிந்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்துடன் ஜூன்20 முதல் இந்தியா விளையாடவிருக்கிறது. கடைசியாக டெஸ்ட்டில் இங்கிலாந்தில் 2007இல் வென்றது குறிப்பிடத்தக்கது.