வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிய கார் கவிழ்ந்தது: 5 பேர் காயம்!
சென்னை வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.
சென்னை வியாசர்பாடி பகுதியில் இருந்து பேசின் பிரிட்ஜ் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, வியாசர்பாடி மேம்பாலம் முடியும் இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காரில் இருந்த 5 பேரை மீட்டனர். சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில் காரை ஓட்டியவர் 18 வயது நிறைவுபெறாத சிறுவன் என்றும், அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.