மனதின் குரல் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை!
மனதின் குரல் நிகழ்ச்சியில் யோகா நாள், கோடைக்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதன்படி, மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று நடைபெற்ற 120 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் யோகா நாள், நீர் சேமிப்பு, கோடைக்காலம் என்பதால் மாணவர்களுக்கான அறிவுரை குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்ததாவது, கோடைக்காலங்களில் நீர் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமானது. கோடைக்கால விடுமுறையில் தன்னார்வ சேவைகளில் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்தும் நிகழ்ச்சிகளுக்கு பள்ளிகள், சேவை அமைப்புகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாணவர்கள், கோடைக்கால விடுமுறையில் தங்களுடைய திறனை மெருகேற்றிக் கொள்வதற்கும், புதிய பொழுதுபோக்கை கற்று கொள்வதற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
2015, ஜூன் 21 ஆம் தேதியில் முதல் சர்வதேச யோகா நாள் கொண்டாடப்பட்டது. யோகா நாளுக்கு இன்னும் 100-க்கும் குறைவான நாள்களே உள்ளன. 2025 ஆம் ஆண்டுக்கான யோகா நாள், ஒரே பூமி ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா என்பதை கருப்பொருளாகக் கொண்டுள்ளது.
யோகாவை மூலமாகக் கொண்டு, உலகம் முழுவதையும் ஆரோக்கியம் நிறைந்ததாக மாற்ற விரும்புகிறோம்.
நம்முடைய திருவிழாக்கள் நாட்டில், வேற்றுமையில் ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றன. ஈத், தமிழ்ப் புத்தாண்டு திருநாளைக் கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
மேலும், திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் பணிகள் குறித்தும் பிரதமர் மோடி பாராட்டிப் பேசினார்.
இதையும் படிக்க:திருப்பூரைப் பாராட்டிய பிரதமர் மோடி!