இந்திய ட்ரோன் மீது சீனா இணையவழி தாக்குதல்? ராணுவம் மறுப்பு
இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஆளில்லா விமானம் மீது சீனா இணையவழி தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளத்தில் வெளியான தகவலை ராணுவம் மறுத்தது.
மேலும், இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத, அதிகாரபூா்வமற்ற தகவல்களை வெளியிட வேண்டாம் என சமூக வலைதளப் பயனாளா்கள் மற்றும் ஊடகங்களுக்கு ராணுவம் வலியுறுத்தியது.
இந்திய ராணுவத்தின் ஆளில்லா விமானம் ஒன்று சீனாவின் பிராந்தியத்துக்குள் நுழைந்ததால் அதன் மீது சீனா இணையவழி தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளப் பதிவொன்றில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தகவல் உண்மைக்குப் புறம்பானது எனவும் ஆதாரபூா்வமற்றது எனவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபோன்ற தவறான தகவல்களால் பதற்றமான சூழல் ஏற்படும் என்பதால் இதை ஊடகங்கள் பகிர வேண்டாம் என ராணுவம் வலியுறுத்தியது.