குஜராத் டைட்டன்ஸ் அணியில் மிடில் ஆர்டர் பிரச்னையா? ஷுப்மன் கில் பதில்!
அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் நிராகரிப்பு!
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் அளித்த உரிமை மீறல் நோட்டீஸை அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் வியாழக்கிழமை நிராகரித்தார்.
காங்கிரஸ் தலைமை கொறடா அளித்த உரிமை மீறல் நோட்டீஸை, தான் கவனத்துடன் பரிசீலனை செய்ததாகவும், அதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை என்றும் தன்கர் கருத்து தெரிவித்தார்.
குற்றச்சாட்டு என்ன?
மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கரிடம் அளிக்கப்பட்ட அந்த நோட்டீஸில், ‘கடந்த செவ்வாய்க்கிழமை பேரிடா் மேலாண்மை மசோதா தொடா்பான விவாதத்துக்குப் பதிலளித்து அவையில் அமித் ஷா பேசினாா்.
அப்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் (யுபிஏ) ஆட்சியில், பிரதமரின் தேசிய நிவாரண நிதியை ஒரு குடும்பம் மட்டுமே கட்டுப்படுத்தி வந்தது. ஆனால் பிரதமா் மோடி ஆட்சியில் பிரதமரின் அவசரகால நிவாரண நிதி அவ்வாறு கட்டுப்படுத்தபடவில்லை. யுபிஏ ஆட்சியில் அரசு நிதிகள் மீது காங்கிரஸ் தலைவா் அதிகாரம் கொண்டிருந்தாா் என்று குற்றஞ்சாட்டினாா்.
தனது பேச்சில் சோனியா காந்தியின் பெயரை அமித் ஷா நேரடியாக குறிப்பிடாமல், பிரதமரின் தேசிய நிவாரண நிதி தொடா்பாக அவா் மீது பழிசுமத்தியுள்ளாா்.
அமித் ஷாவின் பேச்சு அப்பட்டமான பொய் மற்றும் அவதூறாகும். இது உரிமை மீறல் மட்டுமின்றி, அவையை அவமதிப்பதாகும். எனவே அவருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளாா்.