சுனில் நரைனிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்: குல்தீப் யாதவ்
சுனில் நரைனிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ், நடப்பு ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசினார். லக்னௌவுக்கு எதிராக 4 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
மனம் திறந்த குல்தீப் யாதவ்
லக்னௌவுக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமாக பந்துவீசிய நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியபோது, சுனில் நரைனிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாக குல்தீப் யாதவ் மனம் திறந்துள்ளார்.
இதையும் படிக்க: ஐபிஎல் தொடரில் மிட்செல் ஸ்டார்க்கின் ஆதிக்கம்: ஹெட், கிஷன், நிதீஷ் ஆட்டமிழப்பு!
இது தொடர்பாக ஜியோஸ்டாரில் அவர் பேசியதாவது: ஒரு பந்துவீச்சாளராக நீங்கள் போட்டியில் கண்டிப்பாக ஆதிக்கம் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சுனில் நரைன் போன்ற வீரர்கள் அதனை தொடர்ச்சியாக செய்திருக்கிறார்கள். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியபோது, சுனில் நரைனிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். பந்துவீச்சு லென்த்துக்கு அவர் எப்போதும் முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்துவார்.
முன்பெல்லாம், நான் என்னுடைய திறமையை மட்டுமே நம்பி செயல்படுவேன். ஆனால், தற்போது சுனில் நரைன் கூறிய விஷயங்கள் முற்றிலும் சரியானவை என்பதை உணர்கிறேன். நான் என்னுடைய பந்துவீச்சு லென்த்தில் அதிக கவனம் கொடுக்கிறேன். அது எனது பந்துவீச்சில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தியது என்றார்.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
பல ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சுனில் நரைனுடன் இணைந்து விளையாடிய குல்தீப் யாதவ், கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.