Vijay Sethupathi: `போக்கிரி' பட இயக்குநருடன் இணையும் விஜய் சேதுபதி - அசத்தும் லை...
சிலி அதிபர் இந்தியா வருகை!
சிலி நாட்டு அதிபர் 5 நாள் பயணமாக இந்தியா வருகின்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று தென் அமெரிக்க நாடான சிலியின் அதிபர் கேப்ரியல் போரிக் ஃபொண்ட் 5 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் 1 முதல் 5 ஆம் தேதி வரையிலான இந்தப் பயணத்தில் அதிபர் போரிக் உடன் சிலியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய அதிகாரிகள், வணிகம் மற்றும் ஊடகம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, பதவியேற்ற பின்னர் முதல்முறையாக இந்தியா வரும் அதிபர் போரிக் வருகின்ற ஏப்ரல் 1 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருநாட்டு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேலும், அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் சந்தித்து பேசுவார் எனக் கூறப்பட்டுள்ள நிலையில் வருகை தரும் பிரதிநிதிகளுக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி சார்பில் மரியாதை நிமித்தமாக விருந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பயணத்தில் ஆக்ரா, மும்பை மற்றும் பெங்களூர் ஆகிய முக்கிய இந்திய நகரங்களுக்கு செல்லும் அதிபர் போரிக் அங்கு அரசியல், வர்த்தகம் மற்றும் தொழில் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.
முன்னதாக, இந்தியா மற்றும் சிலி நாடுகளுக்கு இடையே பாரம்பரியமாக நட்புறவு கொண்டாடப்பட்டு வருகின்றது. கடந்த 1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர நாள் கொண்டாட்டங்களில் லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து சிலி மட்டுமே அதன் தூதரை அனுப்பியிருந்தது.
இத்துடன், பருவநிலை மாற்றம், தீவிரவாதம் உள்ளிட்ட சர்வதேச அளவிலான பிரச்னைகளில் இந்தியா மற்றும் சிலி ஆகிய இருநாடுகளும் ஒரே நிலைப்பாடைக் கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்