சட்டவிரோத இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: தில்லி அமைச்சர்
தில்லியில் சட்டவிரோத இறைச்சி விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா தெரிவித்தார்.
தில்லி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, நவராத்திரி திருவிழாவிற்கு முன்னதாக நடைபாதைகளிலும் கடைகளிலும் வெளிப்படையாக இறைச்சி விற்கப்படுவது குறித்து பாஜக எம்எல்ஏ கர்னைல் சிங் கவலை தெரிவித்தார். அவருக்கு பர்வேஷ் வர்மா பதிலளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
நவராத்திரி விழாவுக்கு முன்னதாகவும், நவராத்திரி காலங்களிலும் இறைச்சி விற்பனைக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாராவது சட்டவிரோதமாக இறைச்சி விற்பனை செய்தால் அவர்களின் கடை அகற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தங்கள் தொகுதிகளில் ஆக்கிரமிப்பு சம்பவங்கள் ஏற்பட்டால் புகாரளிக்குமாறு எம்எல்ஏக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த அவர், நான் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிடுவேன். தலைநகரில் சட்டவிரோத இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்களை அகற்ற ஏற்கெனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வர்மா தெரிவித்தார்.
இதற்கு ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தேர்ந்தெடுத்து இதுபோன்ற செயல்களை அமல்படுத்துவதாகவும், பாஜகவுக்கு தைரியம் இருந்தால் நவராத்திரியின்போது பெரிய உணவகங்கள் மற்றும் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். ஒருபக்கம் முஸ்லிம்களுக்கு ஈத் பண்டிகைக்கான பெட்டகத்தை விநியோகித்து வரும் பாஜக, அன்றாடம் பிழைப்பை நடத்தும் இறைச்சி விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.