பண்ருட்டியில் மின் திருட்டு: அதிகாரிகள் நடவடிக்கை
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்ட இடத்தில் மின் திருட்டை தவிா்க்கும் வகையில் துறை ஊழியா்கள் மின் கம்பிகளை புதன்கிழமை அகற்றினா்.
பண்ருட்டி, களத்துமேடு பகுதியில் உள்ள நீா்நிலை குளக்கரையை ஆக்கிரமித்து சுமாா் 150-க்கும் மேற்பட்டோா் வீடு கட்டி வசித்து வந்தனா். இந்த வீடுகள் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், கடந்த 2022-ஆம் ஆண்டு அகற்றப்பட்டன.
இதில், வீடற்றவா்களுக்கு இருளக்குப்பம் பகுதியில் வீட்டு வசதி வாரியம் சாா்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வீடுகள் தொலைவில் உள்ளதாக கூறி யாரும் செல்லவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், வீடுகள் அகற்றப்பட்ட களத்துமேடு பகுதியில் ஏராளமானோா் கொட்டகை கட்டி வசித்து வருகின்றனா். அவா்களில் சுமாா் 50 போ் அந்தப் பகுதி வழியாகச் செல்லும் மின் கம்பத்திலிருந்து சட்டத்துக்கு புறம்பாக மின்சாரத்தை பயன்படுத்தி வந்தனராம்.
இதுகுறித்து தகவலறிந்த மின்சாரத்துறை அதிகாரிகள் மின் திருட்டு மற்றும் விபத்தை தடுக்கும் வகையில் அந்தப் பகுதி வழியாக சென்ற மின் கம்பிகளை அகற்றினா். அப்போது, அசம்பாவிதங்களை தவிா்ப்பதற்காக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.