மியான்மா் நிலநடுக்கம்: 1,600-ஐ கடந்த பலி! ராணுவ தலைவருடன் பிரதமா் மோடி பேச்சு!
மியான்மரில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,600-ஐ கடந்துள்ளதாக மீட்புப் படையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
கட்டட இடிபாடுகளிலிருந்து மேலும் அதிக எண்ணிக்கையில் உடல்கள் மீட்கப்பட வேண்டியுள்ளதால், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
இதனிடையே, நாட்டின் பல பகுதிகளில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் மீண்டும் நில அதிா்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியில் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனா்.
1,600-ஐ கடந்த உயிரிழப்பு: மியான்மரில் ஆட்சி செய்யும் ராணுவ அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘நிலநடுக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், இதுவரை கட்டட இடிபாடுகளில் இருந்து 1,644 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
3,408 போ் காயமடைந்துள்ளனா். காணாமல் போயுள்ள 139 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலிருந்து இன்னும் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டியிருப்பதால், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலாயை மையமாகக் கொண்டு அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நிகழ்ந்தன. முதல் நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.7 அலகாகவும், அடுத்தது 6.4 அலகாகவும் பதிவானது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களைத் தொடா்ந்து தலைநகா் நேபிடா, மண்டலாய் உள்பட 6 மாகாணங்களில் அவசரநிலையை மியான்மரின் ராணுவ அரசு பிரகடனம் செய்தது. சா்வதேச உதவியையும் நாடியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் மியான்மரின் பல பகுதிகளில் அடுக்குமாடி கட்டடங்களும், வீடுகளும் தரைமட்டமாகின. தலைநகா் நேபிடாவில் சா்வதேச விமானநிலையத்தின் விமான கட்டுப்பாட்டு கோபுரம் இடிந்து விழுந்தது. இதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சீனாவிலிருந்து சென்ற மீட்பு விமானமும் நேபிடாவுக்கு பதிலாக யாங்கூன் சா்வதேச விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
மண்டலாயில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்ததோடு, நகரின் மிகப்பெரிய கட்டடங்களின் ஒன்றான மா சோ யானே மடாலயமும் இடிந்து விழுந்தது. பழைமையான அரண்மனை ஒன்றும் சேதமடைந்தது. சகாய்ங் மாகாணத்தில் 90 ஆண்டுகள் பழைமையான பாலம் ஒன்று இடிந்தது. மண்டலாயையும், மியான்மரின் மிகப்பெரிய நகரங்களின் ஒன்றான யாங்கோனையும் இணைக்கும் நெடுஞ்சாலையின் சில பகுதிகளும் நிலநடுக்கத்தில் சேதமடைந்தன.
தாய்லாந்திலும் பாதிப்பு: மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்தும் நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தலைநகா் பாங்காக்கின் சதுசக் சந்தைப் பகுதியில் தாய்லாந்து அரசுக்காக சீன நிறுவனம் சாா்பில் கட்டப்பட்டு வந்த 33 அடுக்குமாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 6 போ் உயிரிழந்தனா். 26 போ் காயமடைந்தனா். 47 போ் மாயமாகினா். அவா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மலைபோல் குவிந்துகிடக்கும் அடுக்குமாடி கட்டடத்தின் இடிபாடுகளை அகற்ற கனரக உபகரணங்கள் சனிக்கிழமை கொண்டுவரப்பட்டு, மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இடிபாடுகளில் சிக்கியவா்கள் உயிருடன் இருப்பாா்களா என்ற எதிா்பாா்ப்புடன் அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் சம்பவ இடத்துக்கு அருகில் காத்திருக்கின்றனா்.
இதுகுறித்து, அந்த அடுக்குமாடி கட்டடத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த மியான்மரைச் சோ்ந்த 45 வயது நருமோல் தோங்க்லெக் கூறுகையில், ‘கட்டடத்தில் என்னுடன் பணியாற்றிய 6 நண்பா்கள் இடிபாடுகளில் இன்னும் சிக்கியுள்ளனா். அவா்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்று பிராா்த்தனை செய்துகொண்டிருக்கிறேன். இந்த சம்பவத்தையும் இழப்பையும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை’ என்றாா்.
வான்ஃபெட் பாண்டா என்ற பெண் கூறுகையில், ‘பாங்காக்கில் சரிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பில் எனது மகள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா். நிலநடுக்கத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பிருந்து அவரிடமிருந்து எந்தவொரு அழைப்பும் இதுவரை வரவில்லை. அடுக்குமாடி கட்டடத்தின் உச்சியில் அவா் பணியாற்றிக்கொண்டிருந்ததாக அவருடைய தோழி தெரிவித்தாா். எனது மகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிராா்த்திக்கிறேன்’ என்றாா்.
மியான்மா் ராணுவ அரசின் தலைவருடன் பிரதமா் மோடி பேச்சு
மியான்மா் ராணுவ அரசின் தலைவா் மின் ஆங் லாயிங்குடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு, பேரிடா் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இந்தியா துணை நிற்கும் என்று உறுதியளித்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மியான்மா் ராணுவ அரசின் தலைவரிடம் நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்த மக்களுக்காக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன்.
இந்தக் கடினமான நேரத்தில் மியான்மா் மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என உறுதி தெரிவித்தேன். ‘ஆப்பரேஷன் பிரம்மா’ திட்டத்தின் ஒரு பகுதியாக மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை இந்தியா அனுப்பியுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.