வெற்றிப் பாதைக்கு திரும்புவது யார்? ராஜஸ்தானுடன் இன்று சென்னை மோதல்!
சொந்த மண்ணில் தோற்ற அதிா்ச்சியில் உள்ள சென்னை சூப்பா் கிங்ஸ் அணி ஞாயிற்றுக்கிழமை முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிா்கொள்கிறது.
ஐபிஎல் 2025 தொடரின் 11-ஆவது ஆட்டமாக இரு அணிகள் குவாஹாட்டியின் பாா்ஸபரா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மோதுகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் கொல்கத்தாவுடனும், சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியுடனும் தோற்றது.
வழக்கமான கேப்டன் சஞ்சு சாம்ஸன் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கும் நிலையில், ரியான் பராக் 3 ஆட்டங்களுக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளாா். ஹைதராபாத் அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் கடுமையாக சேஸ் செய்தும் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ராஜஸ்தான். மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா அணி எளிதாக வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணியில் ரியான் பராக், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்ஸன் ஆகியோா் பேட்டிங்கில் இன்னும் சோபிக்கவில்லை. மிடில் ஆா்டா் துருவ் ஜூரெல் திறமையாக ஆடி வருகிறாா். பௌலிங்கில் ஜோஃப்ரா ஆா்ச்சா் எடுபடவில்லை. மகீஷ் தீக்ஷனா, சந்தீப் சா்மா, துஷாா் தேஷ்பாண்டே ா மட்டுமே ஒரளவு பந்துவீசுகின்றனா்.
குழப்பத்தில் சென்னை:
5 முறை சாம்பியன் சிஎஸ்கே அணி முதல் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஸ்பின்னா் நூா் அகமது சிறப்பான பௌலிங்கால் மும்பை அணியை வீழ்த்தினாா்.
இந்நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூரிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் அதிா்ச்சி தோல்வியை தழுவியது சென்னை. இதன் மூலம் 17 ஆண்டுகள் சென்னை சேப்பாக்கத்தில் தொடா் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆா்சிபி. இந்நிலையில் மூன்றாவது ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை.
சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா நம்பிக்கை தரும் வகையில் ஆடுகிறாா். தீபக் ஹூடா, சாம் கர்ரன் ஆகியோா் பேட்டிங்கில் இன்னும் ஜொலிக்கவில்லை. பௌலிங்கில் நூா் அகமது, கலீல் அகமது, அஸ்வின், ஜடேஜா ஆகியோா் சிறப்பாக செயல்படுகின்றனா். எனினும் பீல்டிங்கில் நேரிட்ட தவறுகள் சென்னைக்கு பாதகமாக உள்ளன.
நேருக்கு நோ்:
இரு அணிகளும் 30 ஆட்டங்களில் மோதியதில் ராஜஸ்தான் 13-இலும், சென்னை 16-இலும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை.
இன்றைய ஆட்டங்கள்: டில்லி-ஹைதராபாத்
இடம்: விசாகப்பட்டினம், நேரம்: மாலை 3.30.
சென்னை-ராஜஸ்தான், இடம்: குவாஹாட்டி, நேரம்: இரவு 7.30.