Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
Health: கால் வலிக்கும், வாஸ்குலர் பிரச்னைக்கும் என்ன தொடர்பு? மருத்துவர் எச்சரிப்பது என்ன?
கால் வலிக்கும், ரத்த நாளங்களின் அடைப்புக்கும் தொடர்பிருக்கிறது என்று எச்சரிக்கிறார், திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த வாஸ்குலர் அண்ட் எண்டோ வாஸ்குலர் சர்ஜன் டாக்டர் அருணகிரி விருத்தகிரி. விளக்கமாகச் சொல்லுங்கள் டாக்டர் என்றோம்.

வாஸ்குலர் சர்ஜரி என்பது ரத்த நாளங்கள் அல்லது ரத்தக்குழாய்களுடன் தொடர்புடையது. மூளையில் ஆரம்பித்து பாதம் வரைக்கும் நம் உடலில் ரத்தநாளங்கள் இருக்கின்றன.
இவற்றில் ஏற்படுகிற பிரச்னைகளுக்குச் சிகிச்சையளிப்பதுதான் வாஸ்குலர் சர்ஜரி.
இந்தத் தொடர்பு பற்றி விவரிப்பதற்கு முன்னால் தமனி மற்றும் சிரை பற்றி விளக்கி விடுகிறேன். தமனி என்பது, நம்முடைய இதயத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்பவை.
அந்த வகையில் தமனி கால்களுக்கான ரத்தத்தையும் கொண்டு செல்லும். இப்படி கால்களுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்கிற தமனியில் கொஞ்ச கொஞ்சமாக அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது திடீரென அடைப்பு ஏற்பட்டாலோ கால்களில் வலி ஏற்படும்.
இதயத்தில் அடைப்பு இருந்தாலோ அல்லது சிகரெட் பிடிப்பதால் ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டாலோ, கால்களின் தமனியில் அடைப்பு ஏற்படலாம்.
ஸோ, வாஸ்குலர் பிரச்னை என்பது ரத்த நாளங்களில் ஏற்படுகின்ற அடைப்பு. கால்களுக்கு வருகிற ரத்த நாளத்தில் அந்த அடைப்பு ஏற்பட்டால், கால்களில் வலி ஏற்படும். இதுதான் கால் வலிக்கும், வாஸ்குலர் பிரச்சனைக்கும் உள்ள தொடர்பு.

அறிகுறிகளில் இரண்டு வகை இருக்கின்றன.
முதலில் ஒரு காலில் தாங்க முடியாத வலி ஏற்படும். பிறகு அந்தக் கால் ஜில்லென்று ஆகி விடும்.
பிறகு உணர்வும் அசைவும் இல்லாமல் போய்விடும். இது திடீரென ஏற்படுவது. இதுவொரு வகை.
இன்னொரு வகை, நீண்ட காலமாக நம்முடைய உடலில் இருக்கும். ஆனால், அது குறித்த விழிப்புணர்வு இல்லாததால் கவனிக்காமல் விட்டிருப்போம். அதைச் சற்று விளக்கமாகத்தான் சொல்ல வேண்டும்.
நீரிழிவு இருப்பவர்களுக்கு, அதீத சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு ரத்த நாளங்களில் தொடர்ந்து கொழுப்பு படிந்துப் படிந்து, ஒருகட்டத்துக்கு மேல் ரத்தக்குழாயில் முழுமையாக அடைப்பு ஏற்பட்டு விடும்.
நம்முடைய நாட்டில் நீரிழிவு இருப்பவர்களுக்குத்தான் இந்தப் பிரச்னை அதிகமாக வருகிறது. 'திருப்பதிக்குப் போனேன். அங்க வெயில்ல நடந்தேன். கால் புண்ணாகிடுச்சு. புண்ணு ஆறலை. ஒரு மாசத்துல அழுகி விரலை எடுக்கிற அளவுக்குப் போயிடுச்சு டாக்டர்' என்று வருவார்கள்.
'முள்ளு குத்திடுச்சு. முள்ளை எடுத்திட்டேன். ஆனா, நாலஞ்சு நாள்ல விரலே அழுகிப் போயிடுச்சு. விரலை எடுக்கணும்னு சொல்லிட்டாங்க டாக்டர்' என்றும் வருவார்கள்.

இன்னும் சிலர், சில விரல்களை இழந்தப் பிறகே எங்களைப் போன்ற வாஸ்குலர் சர்ஜனிடம் வருவார்கள். இவற்றுக்கெல்லாம் காரணம், அன்றாட வேலைகளில் ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பது தெரியாமலே இருந்திருப்பார்கள்.
கால் விரல்கள் கருப்பாவது, காலில் புண் இருப்பது, 4 வாரங்களாகக் காலில் இருக்கிற புண் ஆறாமலிப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால், காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு உடனடியாக எங்களைச் சந்தித்தால் கால் இழப்பைத் தவிர்க்க முடியும்.
அடுத்து, பாதங்களில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு போகும் சிரைகளில் வரக்கூடிய 2 பிரச்னைகள் பற்றிப் பார்ப்போம்.
முதல் பிரச்சனை, வெரிகோஸ் வெயின் எனப்படும் நரம்பு சுருட்டல். இரண்டாவது பிரச்னை, ஆழமான சிரைகளில் ஏற்படுகின்ற ரத்த உறைவு ( Deep vein thrombosis).

சிரைகள், பாதங்களில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு போகும் ரத்த நாளங்கள் என்று சொன்னேன் அல்லவா? அந்த ரத்த நாளங்கள் ஒன் வே டிராஃபிக் போல.
அதாவது, பாதத்திலிருந்து இதயத்துக்கு ரத்தம் கொண்டு போவதை மட்டுமே அது செய்யும். அந்த ரத்தம் மறுபடியும் சிரைகள் வழியாகப் பாதங்களுக்குத் திரும்பி வராது.
அப்படி திரும்பி வராமல் இருப்பதற்காகச் சிரைகளில் ஒரு வால்வு இருக்கும். அதை ஒரு கதவு என்று வைத்துக்கொள்வோம். அந்த கதவு சரியாக மூடாமல் இருந்தால், இதயம் நோக்கி மட்டுமே செல்ல வேண்டிய ரத்தம், கீழ் நோக்கி பாய ஆரம்பிக்கும்.
இப்படி பாய ஆரம்பிக்கையில், அதன் தாக்குப்பிடிக்கும் தன்மையைத்தாண்டும்போது அழுத்தம் அதிகமாகி, அந்த சிரைகள் (ரத்த நாளங்கள்) வீங்கி, சுருள ஆரம்பிக்கும்.
சமையல் கலைஞர்கள், பரோட்டா மாஸ்டர், கண்டக்டர், டிராஃபிக் போலீஸ் போல நீண்ட நேரம் நின்றபடியே வேலை பார்ப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

'கிச்சன்ல ரொம்ப நேரம் நின்னா கால் வலிக்குது டாக்டர். கொஞ்ச நேரம் படுத்து காலை தூக்கி வெச்சிக்கிட்டா வலி பரவாயில்லை டாக்டர்' என்று சொல்வார்கள்.
இதுதான் வெரிகோஸ் வெயின் வரப்போவதற்கான பொதுவான அறிகுறி. பிரச்னை அதிகமாகும்போது கணுக்கால் அருகே கருப்பாகும். தொடர்ந்து புண் ஏற்பட்டு, அது ஆறாத அல்சராக மாறும்.
டெலிவரிக்குப் பிறகு நிறைய பெண்களுடைய தொடையில் நரம்புகள் சுருட்டிக்கொண்டு இருக்கும்.
இதுவும், வெரிகோஸ் வெயின் என்கிற நரம்பு சுருட்டல் பிரச்னைதான். இதனால், பெரும்பாலும் பெரியளவில் பிரச்னை ஏற்படாது.
இது திடீரென வரக்கூடிய பிரச்னை. 'நல்லா தான் இருந்தேன் டாக்டர். காலையில ஒரு கால் வீங்கிப்போச்சு. காலை தரையில ஊணவே முடியல. வலி தாங்க முடியல' என்றபடி வருவார்கள்.
'அமெரிக்காவுல இருந்து இந்தியா வந்தேன் டாக்டர். கால் வீங்கிடுச்சு. வந்து இறங்கினவுடனே மூச்சுத்திணறல் வந்துடுச்சு' என்பார்கள்.
உடல் பருமன், தொலை தூர பயணம், நீண்ட நேரம் கால்களில் அசைவே இல்லாமல் வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
பக்கவாதம் வந்து கால்களில் அசைவு இல்லாமல் படுத்திருப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம்.
ஆட்டோமெட்டிக் கார்களை ஓட்டும்போது, க்ளச், பிரேக் போட வேண்டிய அவசியமிருக்காது. இதனால், 7-8 மணி நேரம் கால்களுக்கு அசைவே இல்லாமல் இருப்பார்கள்.
இந்த வகை கார் ஓட்டுபவர்களுக்கும் இந்தப் பிரச்னை தற்போது அதிகமாக வருகிறது. கருத்தரிப்புக்கான ஐ.வி.எஃப் சிகிச்சையில் ஹார்மோன் கொடுத்துதான் ட்ரீட்மென்ட் செய்கிறார்கள்.
அதன் காரணமாகவும், ஆழமான நரம்புகளில் ரத்த உறைவு பிரச்னை ஏற்படலாம்.

'கால் சிரைகளில் ரத்தம் உறைந்தால், ஏன் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது' என்று சிலருக்குக் கேள்வி எழலாம்.
காலில் ரத்தம் உறைந்தால், அது ரத்த நாளங்கள் வழியாக நுரையீரலுக்குள் சென்று அடைத்துவிடும். அதனால்தான் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இவர்கள் உடனடியாக அருகே இருக்கிற மருத்துவமனையை நாட வேண்டும்.
* காலில் திடீரென வலி, கால் சில்லிட்டு விடுகிறது என்றால், அந்தக் காலில் நாடித்துடிப்பு இருக்கிறதா என்பதைப் பரிசோதித்துவிட்டு உடனடியாக ஒரு வாஸ்குலர் சர்ஜனை பாருங்கள்.
அவர், ரத்தக்குழாய்க்குள் இருக்கிற அடைப்பை உறிஞ்சி வெளியே எடுக்கிற சிகிச்சையைச் செய்துவிடுவார்.
பெரும்பாலும் சர்ஜரிதான் தீர்வாக இருக்கும். இதன் மூலம் உங்கள் கால்களை இழக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

*நாள்பட்ட அடைப்பு என்றால், அந்த அடைப்பு எங்கிருக்கிறது என்பதைப் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து, ஓப்பன் சர்ஜரி அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்டவருக்கு இதயம் அல்லது சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு, அடைப்பின் நீளத்தைப் பொறுத்து என்ன சிகிச்சை தரலாம் என்பதைத் தீர்மானிப்போம்.
* வெரிகோஸ் வெயினில், தொடையில் மட்டும் சிலந்தி வலை போல இருக்கிறது. வேறு பிரச்னை இல்லையென்றால், அவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சையளிக்க வேண்டியதில்லை.
வெரிகோஸ் வெய்ன் ஆரம்ப நிலை என்றால், நீண்ட நேரம் நிற்க வேண்டாம். பாதத்திலிருந்து முட்டி வரை ஸ்டாக்கிங்ஸ் போட்டுக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவோம்.

கால் வீங்குகிறது, கருப்பாகி விட்டது, புண் வந்துவிட்டது என்றால் சிகிச்சையளித்தே ஆக வேண்டும். ஓப்பன் சர்ஜரி செய்யலாம்.
எண்டோவெனஸ் லேசர் அப்லேஷன் (Endovenous laser ablation) செய்தால், மறுநாளே வீட்டுக்குச் சென்றுவிடலாம். சீக்கிரமாகத் தங்களுடைய வழக்கமான வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கலாம். சர்ஜரியைவிட இது நல்லது.
* ஆழமான நரம்புகளில் ஏற்படுகிற ரத்த உறைவு பிரச்னையை 80 சதவிகிதம் மருந்து கொடுத்தே சரி செய்துவிடலாம்.
ஒருவேளை மருந்துகொடுத்தும் முன்னேற்றம் தெரியவில்லை என்றால், அடைப்பு இருக்கிற ரத்தக்குழாய்க்குள் ஒரு மெல்லிய டியூப் விட்டு, அதன் மூலம் மருந்தை அனுப்பி அந்த அடைப்பைக் கரைய வைப்போம்.

நீரிழிவு, ரத்த அழுத்தம், ஸ்டிரெஸ் இந்த மூன்றும்தான் ரத்தக்குழாய் அடைப்புக்கு முக்கியமான காரணங்கள்.
இவற்றை கட்டுக்குள் வையுங்கள். மோசமான உணவுகள் ரத்தக்குழாய்க்கு எதிரி. அவற்றைத் தள்ளி வையுங்கள். தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள். 8 மணி நேரம் தூக்கம் அவசியம்.
இவற்றுடன் சிகிச்சை செய்துகொண்டவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து மருந்து எடுக்க வேண்டும்.
பாதியில் மருந்தை நிறுத்தினால், ரத்த நாள அடைப்பு மறுபடியும் வரலாம். திடீர் அடைப்பு, நாள்பட்ட அடைப்பு இரண்டுக்குமே இது பொருந்தும்.
வெரிகோஸ் வெயின் பிரச்னையைச் சரிசெய்துவிட்டால் 90 சதவிகிதம் திரும்ப வராது'' என்கிறார் டாக்டர் அருணகிரி விருத்தகிரி.
பாதங்களைப் பராமரிப்போம்; நலமுடன் வாழ்வோம்.

திருச்சி காவேரி மருத்துவமனையில் வாஸ்குலர் அண்ட் எண்டோ வாஸ்குலர் அறுவை சிகிச்சையில் மூத்த ஆலோசகரான பணியாற்றும் டாக்டர் அருணகிரி விருதகிரி, வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் மற்றும் வாஸ்குலர் நிலைகளைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் நிபுணர்.
மேலேயுள்ள கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள வாஸ்குலர் சார்ந்த பிரச்னைகள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ இருக்கும்பட்சத்தில், டாக்டர் அருணகிரி விருதகிரியிடம் ஆலோசனை பெறுவதற்கான அப்பாயின்ட்மென்ட் லிங்க் இதோ: https://www.kauveryhospital.com/doctors/trichy-tennur/vascular-surgery/dr-arunagiri-viruthagiri/
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY