விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி தெரிந்தது? சுனிதா வில்லியம்ஸ் பதில்!
Doctor Vikatan: 17 வயது மகளுக்கு வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 110: சாதாரணமானதா, கவலைக்குரியதா?!
Doctor Vikatan: என் மகளுக்கு 17 வயதாகிறது. சமீபத்தில்தான் அவளுக்கு போர்டு எக்ஸாம் முடிந்திருக்கிறது. அதன் காரணமாக தூக்கமில்லாமலும் அதிக ஸ்ட்ரெஸ்ஸிலும் இருந்தாள். கடந்த சில தினங்களுக்கு முன்பு, எனக்கு சுகர் டெஸ்ட் செய்தபோது மகளுக்கும் எடுத்துப் பார்த்தேன். அவளுக்கு வெறும்வயிற்றில் 110 என காட்டியது. இது சாதாரணம்தானா... கவலைப்பட வேண்டியதா?
- Santhiya, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி
17 வயது மகள்... தேர்வு நேரத்தில், தூக்கமில்லாமல் இருந்தபோது சர்க்கரை அளவை செக் செய்திருக்கிறீர்கள். ஏன் டெஸ்ட் செய்தீர்கள் என்று தெரியவில்லை. அது அவரது ஸ்ட்ரெஸ்ஸை மேலும் அதிகரிக்கவே செய்திருக்கும். பொதுவாகவே, தேர்வு நெருங்கும்போதோ, உடல்நலமின்றி இருக்கும்போதோ, எதிர்பாராத நிகழ்வுகளின் போதோ 'ஸ்ட்ரெஸ் இண்டியூஸ்டு ஹைப்பர்கிளைசீமியா' (Stress-induced hyperglycemia -SIH) என்ற பிரச்னை வரலாம். ஏதேனும் காரணங்களால் நாம் ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாகும்போதும், பயத்துக்கு உள்ளாகும்போதும் நம் உடலில் கார்ட்டிசால் மற்றும் அட்ரீனலின் சுரப்பு அதிகமாகும்.
காட்டிசாலும் அட்ரீனலினும் நம் உடலில் அதிக அளவிலான குளுக்கோஸை உற்பத்தி செய்யும். தவிர, இன்சுலின் சுரப்பையும் குறையச் செய்யும். இந்த இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்வதால் சிலருக்கு 'ஸ்ட்ரெஸ் இண்டியூஸ்டு ஹைப்பர்கிளைசீமியா' பாதிப்பு வரலாம். இதனால் ரத்தச் சர்க்கரை அளவானது, நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல 110 என்ற அளவிலும் இருக்கலாம்... சிலருக்கு 200 வரையிலும்கூட காட்டலாம். இப்படி ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாகக் காட்டும்போது அதற்காக பயப்படவோ, பதறவோ தேவையில்லை. மருந்து எடுக்க வேண்டிய தேவையும் இல்லை.
இந்த நேரத்தில் பேலன்ஸ்டு டயட் எனப்படும் சரிவிகித உணவு எடுக்கவேண்டியது முக்கியம். ஸ்ட்ரெஸ் மற்றும் பதற்றம் நீங்க ரிலாக்சேஷன் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். போதுமான அளவு தூக்கம் இல்லை என்றால் அதை முறைப்படுத்த வேண்டும்.

பிள்ளைகளுக்கு தேர்வு நெருங்கும்போது, இடையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும், தூங்கவும் அனுமதிக்க வேண்டும். 6 முதல் 9 மணி நேரத் தூக்கம் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
ஸ்ட்ரெஸ் காரணமாக குழந்தைகள் நொறுக்குத்தீனிகள், பிஸ்கட் சாப்பிடுவது, ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது போன்றவற்றைச் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சாப்பிடாமலேயே இருப்பதும் தவறு. காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும். ஸ்ட்ரெஸ் இல்லாமலிருப்பது மிக முக்கியம். ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க முடியாத பட்சத்தில், மருத்துவ ஆலோசனையை நாடலாம். மற்றபடி ஸ்ட்ரெஸ்ஸால் அதிகரிக்கும் ரத்தச் சர்க்கரைக்கு பயப்படத் தேவையில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.