சமந்தா கோவிலில் குடும்பத்துடன் வழிபடும் மக்கள்!
நடிகை சமந்தாவுக்கு ரசிகர் கட்டிய கோவிலில் தொடர் வழிபாடு நடைபெற்று வருகிறது.
இந்தியளவில் பிரபலமானவர் நடிகை சமந்தா. சென்னையைச் சேர்ந்தவரான இவர் பானா காத்தாடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவருக்கு கத்தி, தெறி உள்ளிட்ட படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தின.
பின், தெலுங்கு சினிமாக்களில் நடித்துவந்தவருக்கு நடிகர் நாக சைதன்யாவுடன் காதல் ஏற்பட, இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், கருத்து வேறுபாடுகளால் சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து சமந்தா இணையத் தொடர்களில் கவனம் செலுத்தினார். ஃபேமிலி மேன் தொடரில் நடித்து இந்தியளவில் கவனம் பெற்றதுடன் பாராட்டுகளையும் பெற்றார்.
தற்போது, சில படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதுடன் அவரே ஒரு படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் அப்பகுதியில் நடிகை சமந்தாவுக்கு கடந்தாண்டு கோவில் கட்டியதுடன் வழிபாடும் செய்து வந்தார்.
சமந்தா கோவில் எனப் பெயரிடப்பட்ட இந்தக் கோவிலில் சமந்தாவின் மார்பளவு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், தற்போது உள்ளூர் மக்கள் குடும்பத்துடன் இக்கோவிலுக்கு வந்து சமந்தாவை வழிபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமந்தாவின் கொடை பண்பைப் பாராட்டும் விதமாகவே இக்கோவிலைக் கட்டியதாக அந்த ரசிகர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா நடிகைகளான குஷ்பு, ஹன்சிகா, நமீதாவுக்கு கோவில் கட்டியதுபோல் சமந்தாவுக்கும் கட்டி அதில் வழிபாடும் நடப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர அளித்துள்ளது.
இதையும் படிக்க: