திருவிழாவில் பானிபூரி சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 100 பேர் மருத்துவமனையில் அனுமதி!
வங்கதேசத்தில் திருவிழாவில் பானிபூரி சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேச நாட்டில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடந்த மார்ச் 31 அன்று இரவு நடத்தப்பட்ட திருவிழாவில் பானிபூரி சாப்பிட்டு தங்களது விடுகளுக்கு சென்ற மக்கள் அனைவருக்கும் கடுமையான வயிற்று வலி, வாந்தி, வயிற்று போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகினர்.
இதனைத் தொடர்ந்து, இந்த பாதிப்புக்குள்ளான 95 பேர் மீட்கப்பட்டு ஜெஸ்ஸூரிலுள்ள அபய்நகர் உபசில்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், ஆபத்தான நிலையில் சுமார் 10 பேர் குல்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் கூறுகையில், அவர்கள் சாப்பிட்ட உணவில் பேக்டிரியாக்கள் இருந்ததினால்தான் மக்கள் அனைவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பையும் சாலையோர உணவுகள் மீதான அச்சத்தையும் அதிகரித்துள்ள நிலையில் தலைமறைவாகியுள்ள அந்த பானிபூரி கடையின் உரிமையாளரை அந்நாட்டு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
முன்னதாக, வங்கதேசத்தில் காய்கறிகள், பழங்கள், கடல் உணவு, இறைச்சி, பால் உள்ளிட்ட மக்கள் அன்றாட பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்கள் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதனால் அங்கு உணவுப் பாதுகாப்பானது தொடர்ந்து கேள்விக்குறியாகி வருவதாகவும், அந்நாட்டின் பிரதான செய்தித்தாளான தி டெய்லி ஸ்டார் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:மியான்மா் நிலநடுக்கம்: உயிரிழப்பு 3,643-ஆக உயர்வு