MI vs KKR: "அஸ்வனி குமாரின் அந்த விக்கெட் மிக முக்கியமானது" - வெற்றிக்குப் பின்னர் ஹர்திக் பாண்டியா
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதலில் பந்துவீசுவதாகக் கூறினார். அதன்படி, பந்துவீச்சைத் தொடங்கிய பல்தான்ஸ் பவுலர்ஸ், 16.2 ஓவர்களில் கொல்கத்தாவை 116 ரன்களுக்குச் சுருட்டினர்.

அறிமுக வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைதொடர்ந்து, களமிறங்கிய மும்பை அணி 13 ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை பவுலர் அஸ்வனி குமார் ஆட்டநாயகன் விருது வென்றார்.
வெற்றிக்குப் பின்னர் பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, ``மிகவும் திருப்திகரமான வெற்றி. ஒரு அணியாக நாங்கள் இதைச் செய்தோம். இங்கும் அங்கும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது எப்போதுமே சவாலாக இருக்கிறது. இருப்பினும், இந்தப் போட்டியில் அஸ்வனி குமார் பந்து வீசலாம் என்று நினைத்தோம். எங்கள் அணியினர் அனைத்து இடங்களுக்கும் சென்று இளம் வீரர்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

நாங்கள் பயிற்சி ஆட்டம் விளையாடியபோது, இவரின் (அஸ்வனி குமார்) லேட் ஸ்விங், வித்தியாசமான பவுலிங் ஆக்ஷனைக் கவனித்தோம். இடதுகை பந்துவீச்சாளர் என்பது மேலும் ப்ளஸ். ரஸல் விக்கெட்டை எடுத்து மிக முக்கியமானது. குயின்டன் டி காக்கின் கேட்சை அவர் பிடித்த விதம், ஒரு வேகப்பந்து வீச்சாளர் அவ்வளவு உயரத்தில் குதிப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது." என்று கூறினார்.