கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது தவறில்லை: செல்வப்பெருந்தகை
கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது தவறில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம், சட்டப்பேரவையில் இன்று(ஏப். 2) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து ஆதரவு அளித்தனர். பாஜக, அதிமுக என எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்களும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளித்ததால், தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
”கச்சத்தீவு விவகாரத்தில் திமுக அரசு கொண்டுவந்த தனித்தீர்மானத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. அதேநேரத்தில் சில உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது சரிதான், காங்கிரஸ் ஒருபோதும் அதைத் தவறு எனச் சொல்லாது. வெறும் 282 ஏக்கர் நீர் இல்லாத வானம் பார்த்த பூமியை கொடுத்துவிட்டு, பல லட்சம் ஏக்கர் நிலத்தை இந்தியாவிற்கு பெற்றுக் கொடுத்தவர் இந்திரா காந்தி.
நடுவுல கொஞ்ச பக்கத்தைக் காணோம் என்பதைப் போல சில உண்மை வரலாறுகளை மறந்து பேசுகிறார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கச்சத்தீவு தேவையென்ற தீர்மானத்தை ஆதரிக்கிறோம்.
அதனால் தீர்வுகண்டால் எங்களைவிட மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் கிடையாது. நாங்கள் எப்போதுமே மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல்: காங்கிரஸ்