வக்ஃப் மசோதாவுக்கு எதிராக வழக்கு: கருப்பு பட்டை அணிந்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீது 12 மணிநேரம் விவாதம் நடத்தப்பட்டு இன்று நள்ளிரவு 2 மணியளவில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றனர்.
பேரவைத் தொடங்கியவுடன் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அவர் பேசியதாவது:
”கடந்த மார்ச் 23 ஆம் தேதி வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவின் முன்வரைவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவின் பல்வேறு கட்சிகளின் எதிர்ப்புகளை மீறியும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
இந்த மசோதாவுக்கு எதிராக 232 உறுப்பினர்களும் ஆதரவாக 288 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். இந்த சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டியது என்பதுதான் நமது நிலைபாடு.
கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு நள்ளிரவு 2 மணிக்கு மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல், மத நல்லிணக்கத்தை குலைக்கும் செயல். இதற்கு எதிராக கருப்பு பட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ளோம். இந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும்” என்றார்.