ஜல்லிக்கட்டு மாடு முட்டி காவல் ஆய்வாளர் காயம்: விஜயபாஸ்கர் முதல் உதவி
விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள இருந்திராப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விராலிமலை காவல் ஆய்வாளர் சந்திரசேகர்(56) மாடு முட்டியதில் படுகாயமடைந்தார். இவருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முதல் உதவி சிகிச்சை அளித்ததை அடுத்து மேல் சிகிச்சைக்காக திருச்சி கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விராலிமலை வட்டம், இருந்திராப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டுப் போட்டி காலை 8 மணியளவில் தொடங்கியது. இதில், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள், மாடுபிடி வீரா்கள் உரிய மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா்.
ராமேசுவரத்தில் வழக்குரைஞர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

போட்டியின்போது, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்துவந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கி வருகினர். இதில், மாடு பிடி வீரா்கள், பாா்வையாளா்கள் என பலர் காயமடைந்தனா். அவா்களுக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த முகாமில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர்களில் பணியில் இருந்த விராலிமலை காவல் ஆய்வாளர் சந்திரசேகர்(56) விலாவின் மீது மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார். அவருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரூரை சேர்ந்த சந்திரசேகருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஆய்வாளராக பணியாற்றினார். தற்போது விராலிமலை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.