மும்பை தொடர் குண்டு வெடிப்பு: குற்றவாளி டைகர் மேமன் சொத்துகளை மத்திய அரசிடம் ஒப்படைத்த நீதிமன்றம்
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் டைகர் மேமன் குடும்பத்திற்கு சொந்தமான சொத்துக்களை சிறப்பு நீதிமன்றம் பறிமுதல் செய்திருந்தது.
மும்பையில் டைகர் மேமன் குடும்பத்திற்கு வீடு, அலுவலகம், காலி இடம் என 14 சொத்துகள் இருக்கிறது. அந்த சொத்துக்கள் இன்னும் கோர்ட் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதையடுத்து அச்சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கோரி மத்திய அரசு தடா சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இதனை ஆய்வு செய்த தடா கோர்ட் டைகர் மேமன் குடும்பத்திற்கு சொந்தமான மும்பை பாந்த்ராவில் உள்ள ஒரு வீடு, மாகிம் அலுவலகம், மும்பை மாகிம், சாந்தாகுரூஸில் உள்ள காலி நிலம், குர்லாவில் இரண்டு வீடு, மனீஷ் மார்க்கெட்டில் 3 கடைகள் என மொத்தம் 14 சொத்துகளை சிறப்பு நீதிமன்றம் மத்திய அரசிடம் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அச்சொத்துக்களை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அச்சொத்துக்களை மத்திய அரசு விரைவில் ஏலம் மூலம் விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே டைகர் மேமன் குடும்பத்திற்கு சொந்தமான 3 வீடுகள் இருந்த அல் ஹுசைனி என்ற கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து அக்கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட கட்டிடவாசிகள் முடிவு செய்தனர்.
அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரி கட்டிடவாசிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதனை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் அதற்கு ஒப்புதல் அளித்தது.
ஏலம் போன தாவூத் இப்ராகிம் சொத்து
மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தாவூத் இப்ராகிற்கு சொந்தமான சொத்துகள் அனைத்தையும் மத்திய அரசு பறிமுதல் செய்தது. அந்த சொத்துக்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முயற்சி எடுத்தது. ஆரம்பத்தில் அந்த சொத்துகளை யாரும் ஏலம் எடுக்கவில்லை. ஆனால் அதன் பிறகு அனைத்து சொத்துகளும் ஏலம் விடப்பட்டுவிட்டது.

1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு
மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்ததொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு அதற்கு ஏற்பாடு செய்த தாவூத் இப்ராகிம், டைகர் மேமன் உள்பட இதில் தொடர்புடைய அனைவரும் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டனர்.
1993-ம் ஆண்டு மும்பையில் மார்ச் 12-ம் தேதி 12 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 300 பேர் உயிரிழந்தனர். மேலும் 700-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை தடா சிறப்பு நீதிமன்றத்தில் 12 ஆண்டுகள் நடந்தது. இதில் நடிகர் சஞ்சய் தத் உள்பட 100 பேர் தண்டிக்கப்பட்டனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
