``கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள்'' - 140 கி.மீ துவாரகா பாதயாத்திரையில் ஆனந்த் அம்பானி உருக்கம்
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. மிகப்பிரமாண்டமாக நடந்த இத்திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் உலக தலைவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
ஆனந்த் அம்பானி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருந்து அங்குள்ள பெட்ரோல் சுத்திகரிப்பு மையத்தை கவனித்து வருகிறார். அதோடு அங்கு நலிவடைந்த வனவிலங்குகளுக்காக பிரம்மாண்ட முகாம் ஒன்றை ஆனந்த் அம்பானி அமைத்திருக்கிறார். வந்தாரா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த முகாமிற்கு சமீபத்தில் மத்திய அரசு விருது கொடுத்து கெளரவித்தது.
அதோடு பிரதமர் நரேந்திர மோடியும் சமீபத்தில் வந்தாராவிற்கு வந்து சென்றார். ஆனந்த் அம்பானி வன விலங்குகள் மட்டுமல்லாது ஆன்மிகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார்.

ஆனந்த் அம்பானி ஜாம்நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் குஜராத்தின் மிகவும் பிரபலமான துவாரகா கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து செல்கிறார். அவருடன் அவரது கம்பெனி முக்கிய பிரமுகர்கள் செல்கின்றனர். மேலும் இப்பாத யாத்திரையில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் மற்றும் அவரது காதலன் சிகர் பஹாரியா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இப்பாதயாத்திரை கடந்த 5 நாள்களாக நடந்து கொண்டிருக்கிறது. இரவு பகல் பாராமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஆனந்த் அம்பானி 140 கிலோமீட்டர் நடந்து அடுத்த 4 நாட்களுக்குள் துவாரகா கோயிலுக்குச் சென்றடைவார்.
இது குறித்து ஆனந்த் அம்பானி வெளியிட்டுள்ள வீடியோவில், ''கடவுள் துவாரகாதீஷ் அருளால் அடுத்த 2-4 நாள்களில் துவாரகா சென்றடைவோம். துவாரகாதீஷ் மீது இளைஞர்கள் நம்பிக்கை வையுங்கள். எந்த வேலையை தொடங்குவதாக இருந்தாலும் துவாரகாதீஷை நினைத்துக்கொள்ளுங்கள். எந்த தடங்கலும் இல்லாமல் வேலை முடிவடையும். கடவுள் இருக்கும்போது அதைப்பற்றி கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை'' என்றார்.
கடந்த ஜனவரி மாதம் ஏற்கெனவே ஆனந்த் அம்பானி தனது தந்தை முகேஷ் அம்பானியுடன் துவாரகா வந்து வழிபட்டுச்சென்றார். அடிக்கடி அம்பானி குடும்பம் துவாரகா கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
