ரத்தன் டாடா உயில்: சமையல்காரர், உதவியாளர், பணியாளர்கள், நண்பர்கள்... யாருக்கு என்ன கிடைக்கும்?
தொழிலதிபர் ரத்தன் டாடா எழுதிய உயில்
தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவர் இறக்கும் முன்பு உயில் எழுதி வைத்துச் சென்றுள்ளார்.
அவர் ரூ.3900 கோடி மதிப்புள்ள சொத்துகளை விட்டுச் சென்றுள்ளார். அந்த சொத்துகள் யாருக்கு சென்றடைய வேண்டும் என்பது குறித்து விரிவாக உயிலில் எழுதி இருக்கிறார்.
மொத்தம் 24 பேர் கொண்ட பட்டியலை எழுதி அவர்களில் யாருக்கு எவ்வளவு கொடுக்கவேண்டும் என்பது உள்பட அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளது.

இவர்களுக்கு கொடுத்தது போக எஞ்சிய சொத்துகள் ரத்தன் டாடா பெயரிலான சொத்துகள் அனைத்தும் அவரது பெயரில் தொடங்கப்பட்டுள்ள டிரஸ்டிற்கு சென்றுவிடும்.
தனது பழைய நண்பர் மோகினி தத்தாவிற்கு கணிசமான சொத்தை உயிலில் எழுதி வைத்திருக்கிறார். இந்த உயிலில் இருக்கும் விபரங்களை யார் நிறைவேற்ற வேண்டும் என்பதைக்கூட ரத்தன் டாடா எழுதி வைத்திருக்கிறார்.
உயில் விபரம் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. உயிலில் இருக்கும் விபரங்களை யாராவது எதிர்த்தால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய எதுவும் கிடைக்காது என்றும் ரத்தன் டாடா குறிப்பிட்டுள்ளார்.
ரத்தன் டாடா எழுதி இருக்கும் உயிலில் தன்னுடன் வீட்டிலும், அலுவலகத்திலும் கடைசி வரை வேலை செய்த மற்றும் உதவியாளராக இருந்த அனைவருக்கும் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து எழுதி வைத்திருக்கிறார்.

சமையல்காரர் ராஜன் ஷா- விற்கு ரூ. 1 கோடி
அதன் படி ரத்தன் டாடாவிடம் சமையல்காரராக இருந்த ராஜன் ஷாவிற்கு ரூபாய் ஒரு கோடி கொடுக்கவேண்டும் என்றும், அவர் வாங்கிய கடன் ரூபாய் 51 லட்சத்தை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர ரத்தன் டாடாவின் சமையல் நிர்வாகத்தை கவனித்துக்கொண்ட சுப்பையா கோனார் என்பவருக்கு ரூ. 66 லட்சம் கொடுக்கவேண்டும் என்றும், அவர் வாங்கிய ரூ.36 லட்சம் கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும், தனது உதவியாளர் கில்டருக்கு ரூ.10 லட்சம் கொடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பகுதி நேர ஊழியர்கள், கார் கழுவுபவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் கொடுக்கவேண்டும் என்றும், 7 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் வேலை செய்த வீட்டு வேலைக்காரர்களுக்கு ரூ.15 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சாந்தனு நாயுடுவுக்கு ரூ. 1 கோடி தள்ளுபடி
ரத்தன் டாடாவிடம் அந்தரங்க உதவியாளராக இருந்த சாந்தனு நாயுடு வாங்கி இருந்த கடன் ரூ. 1 கோடியை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும்,
தனது டிரைவர் ராஜு லியோன் வாங்கிய ரூ.18 லட்சத்தை தள்ளுபடி செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் ரத்தன் டாடாவிடம் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த உயிலை நிறைவேற்றுபவர்கள் என்னிடம் வேலை செய்தவர்கள் வாங்கிய கடனை வசூலிக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.
தனது வளர்ப்பு நாயான ஜெர்மன் ஷெபார்டு நாய்க்காக உயிலில் ரூ.12 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.30 ஆயிரம் கொடுக்கவேண்டும் என்றும், தனது மற்றொரு வளர்ப்பு நாய் திடோவை சமையல்காரர் ராஜன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரத்தன் டாடா முதன் முதலில் 1996-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி உயில் எழுதினார். பின்னர் 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் உயிலை மாற்றி எழுதினார்.

அதன் பிறகு முந்தைய இரண்டு உயில்களையும் ரத்து செய்துவிட்டு 2022-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி புதிய உயில் எழுதினார். அதன் பிறகும் அந்த உயிலில் 4 முறை திருத்தம் செய்தார்.
தனது ஆடிட்டர் திலிப் மற்றும் டாக்டர் போரஸ் கபாடியா ஆகியோர் முன்னிலையில் உயிலில் ரத்தன் டாடா கையெழுத்திட்டார். ரத்தன் டாடாவிடம் 11 கார்கள் இருக்கிறது. 65 கைக்கடிகாரம், 21 கடிகாரம், 52 பேனா மற்றும் பெயிண்டிங்களை விட்டுச்சென்றுள்ளார். அதன் மதிப்பு ரூ.12 கோடியாகும்.
உயிலில் ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா அல்லது அவரது குழந்தைகளின் பெயர் இடம்பெறவில்லை.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
