``டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால் குண்டு மழை பொழிவோம்'' - ஈரானை எச...
UP: ``மீரட் சம்பவம் போல நடக்க கூடாது'' - மனைவியை அவர் காதலித்த நபருக்கு திருமணம் செய்து வைத்த கணவன்
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் சமீபத்தில் பெண் ஒருவர் தனது காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாள்களில் தொடர்ந்து மனைவியால் மேலும் ஒரு கணவன் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலைகளால் கணவன்கள் மத்தியில் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அது போன்ற ஒரு விபரீதம் நடப்பதை தடுக்க வாலிபர் ஒருவர் எடுத்துள்ள முடிவு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

கோரக்பூரை சேர்ந்த ராதிகா என்ற பெண்ணை பப்லு என்பவர் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. பப்லு கூலி வேலை செய்து வருகிறார். அவர் இதற்காக பக்கத்து மாநிலத்திற்கு சென்றார். ஆனால் அவரது மனைவி ராதிகா தனது கணவரின் ஊரான சண்ட் கபீர் நகரில் குழந்தைகளோடு வசித்து வந்தார்.
பப்லு வெளியூருக்கு வேலைக்குச் சென்ற நேரத்தில் ராதிகாவிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து பப்லுவிற்கு தெரிய வந்தது.
ராதிகா விகாஷை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தார். அவர்களின் தொடர்பை உறுதிபடுத்த மனைவியிட்ம சொல்லாமல் பப்லு சொந்த ஊருக்கு வந்தார். ஊரில் வந்து அவர்களின் தொடர்பை உறுதிபடுத்திக்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் தனது மனைவியிடம் எந்த வித சண்டையும் போடவில்லை. கேள்வியும் கேட்கவில்லை.
இது குறித்து ஊர் பெரியவர்களிடம் பப்லு பேசினார். தனது மனைவியை அவர் விரும்பும் நபருக்கே திருமணம் செய்து வைக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

ராதிகாவும் விகாஷை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். இதையடுத்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் அங்குள்ள சிவன் கோயிலில் இருவருக்கும் பப்லு திருமணம் செய்து வைத்தார். திருமணம் செய்து வைத்ததோடு அவர்களுடன் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
ராதிகாவின் குழந்தைகளும் திருமணத்தில் பங்கேற்றனர். பப்லு தனது மனைவியை அவர் காதலித்த நபருடன் திருமணம் செய்து வைத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
இது குறித்து பப்லு கூறுகையில், ''சமீப காலமாக கணவன்கள் மனைவியால் படுகொலை செய்யப்படுகின்றனர். மீரட்டில் நடந்தது போன்ற சம்பவங்களை பார்த்த பிறகு எனது மனைவியை அவர் விரும்பும் காதலனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தேன். இதன் மூலம் இருவரும் அமைதியாக வாழமுடியும். அதோடு எனக்கும் பிரச்னை ஏற்படாது''என்றார்.
ராதிகா மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளையும் தானே தனியாக வளர்த்துக்கொள்வதாகவும் பப்லு தெரிவித்துவிட்டார். பப்லு செய்த காரியத்தை பார்த்த கிராம மக்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.

உத்தரப்பிரதேசத்தின் அவுரியா நகரில் திருமணமாகி இரண்டே வாரத்தில் 22 வயதான பிரகதி என்ற பெண் தனது கணவனை தன் காதலன் துணையோடு ஆள் வைத்து சுட்டுக்கொலை செய்தார்.
அதற்கு முன்பு மீரட்டில் வசித்து வந்த முஸ்கான் என்ற பெண் தனது கணவன் ரஜபுத்திற்கு சாப்பாட்டில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து காதலன் துணையோடு கழுத்தை அறுத்து கொலை செய்து உடம்பை பல துண்டுகளாக வெட்டி சிமெண்ட் டிரம்பில் அடைத்து வைத்தார். அதோடு கொலையை கொண்டாட முஸ்கான் தனது காதலன் சாஹிலுடன் சிம்லாவிற்கும் சென்று வந்தார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
