செய்திகள் :

``அது எங்கம்மா தாங்க... என்னாச்சு அவங்களுக்கு?"- பதறிய மகள்; நிதானித்த நான்| ஒரு நாள் அனுபவம்

post image

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத திங்கட்கிழமை. எதையும், யாரையும் கண்டுகொள்ளாமல் டூ-வீலரை முறுக்கி அடையாறு பறந்தேன். 'உங்களின் பயம் புற்றுநோய் பற்றியதாக இருக்கக்கூடாது... காலதாமதத்தை பற்றியதாக இருக்க வேண்டும்' என்ற வசனம் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் சுவரின் எழுதப்பட்டு இருந்தது. அதனை வாசித்த போது, 'இப்போதும் தாமதம் இல்லை' என்று உள்ளுணர்வு சொல்லியது. பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தேன். பார்க்கும் பக்கமெல்லாம் பரபரப்பு, திரும்பும் திசையெல்லாம் கவலை தோய்ந்த முகங்கள், எதையோ வெறித்து நோக்கிய கண்கள் என இயல்பை மீறிய சூழல்.

வீல் சேரில் அமர்ந்திருந்த ஒருவர் வாயில் மாட்டியிருந்த டியூப் மூலம் சுவாசித்துக் கொண்டிருந்தார். மரத்தின் அருகில் நின்றிருந்த ஒரு பெண், 'தலை வெடிக்கிற மாதிரி இருக்கு' என தன் மகனின் கைகளை இறுகப் பற்றியிருந்தார். ஒவ்வொருவரையும் பார்க்கும்போது மனசுக்குள் ஏதோ ஓர் அழுத்தம்.

'இப்போதும் தாமதம் இல்லை' - அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் வாசகம்
'இப்போதும் தாமதம் இல்லை' - அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் வாசகம்

'நான் வந்து பத்து நிமிசம் ஆச்சு. முதல்ல அப்ளிகேஷன் ஃபில் பண்ணி கொடுக்கணுமாம்' என்று என் தோழியின் குரல் சற்றே மனதை நிதானப்படுத்தியது. அப்ளிகேஷனை நிரப்பிக் கொடுத்ததும், 'அந்த ரூம்ல வெயிட் பண்ணுங்க. உங்க பேரை மைக்ல கூப்பிடுவாங்க' என்ற அந்த பணிப்பெண் சொன்னதும், அவர் கைகாட்டிய அறைக்குச் சென்று, ஈய நிறம் பூசப்பட்ட இரும்பு நாற்காலியில் அமர்ந்தோம். அங்கிருந்த குழந்தைகளின் முகத்தில் கூட சிறு புன்னகையைப் பார்க்க முடியவில்லை. அழுத்தமான மனநிலையே அனைவருக்கும்! பொதுவாக, பொது வெளியில் அமர்ந்தால் எல்லாரும் தலைகுனிந்து போன் பார்ப்பது கடந்த பத்து ஆண்டுகளில் இயல்பாகிவிட்டது. ஆனால் அந்த அறையில் இருந்த பெரும்பாலானவர்களின் கையில போன் இல்லை. நிசப்தமான சூழல். பணம் இருப்பவர்கள், இல்லாதவர்களுக்குமான வித்தியாசத்தை அவர்கள் அணிந்திருந்த ஆடை காண்பித்து கொடுத்தது. அந்த இடத்தில் இருந்த வெறுமை, நிசப்தம் உண்மையில் எப்பேர்ப்பட்ட தைரியவான்களையும் அசைத்துப் பார்த்துவிடும். 

நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்குப் பின்னால் பயனாளிகளின் உதவிக்கு என்று தனித்தனி கவுன்ட்டர்கள் இருந்தது. கைகள் மட்டும் நுழையும் அந்த சிறிய துளையின் வழியாக கையில் வைத்திருந்த பேப்பர் ஒன்றை உள்ளே நீட்டினார் அந்தப் பெரியவர். கவுன்ட்டரில் இருந்த இளைஞனோ, அதைக் கையில் வாங்கி பார்க்காமல், குனிந்தபடியே, `இங்க இல்ல...' என்று சொன்னார். அதற்கு அந்தப் பெரியவர், சற்றே குரலை உயர்த்தி, "ஆளாளுக்கு அங்க, இங்கனு சொன்னா என்ன அர்த்தம்? பத்து நிமிசமா வரிசையில நிக்கிறேன். இங்க இல்ல, அங்க இல்லன்னு இழுத்து அடிக்கிறீங்க" என்று கூச்சலிட, அந்த இளைஞன் அமைதியான குரலில், "ஐயா என்கிட்ட ஏன் கத்துறீங்க. நீங்க கொண்டு வந்த ஃபார்ம் இந்த கவுன்ட்டர் இல்ல. நான் கையில வாங்கிப் பாக்கலைனாலும் பேப்பரைப் பார்த்ததும் கண்டுபிடிச்சுட்டுதான் இங்க இல்லன்னு சொல்றேன்"என பதில் சொன்னான்.

'கத்தல சாமி... வயசானவன்' - அந்த வயதானவர்
'கத்தல சாமி... வயசானவன்' - அந்த வயதானவர்

அதற்கு அந்த பெரியவரோ,"கத்தல சாமி... வயசானவன் என் மகளுக்கு வைத்தியம் பார்க்க வந்திருக்கேன். அது உடம்புக்கு முடியாம அங்க இருக்கு. வாழ்க்கையே வெறுத்துப்போச்சு. கும்பிட்ட சாமி துணை நிக்கல... மனுஷங்க நீங்களாவது ஆதரவா நிக்கலாம்ல" என அந்தப் பெரியவர் தன் இயலாமையை கண்ணீருடன் பகிர்ந்தபோது, நிசப்தம் இன்னும் அதிகமானது. அந்த இளைஞனோ எதுவும் பேசாமல் தன் பொறுப்பை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, 'நீங்க இங்க உட்கார்ந்து இருங்க. இதை நான் பண்ணிட்டு வந்து தர்றேன். மனுசங்க தான் சாமி" என்று அந்த பேப்பரை பெரியவரிடம் இருந்து வாங்கிய நிமிடம், அன்பைப் பகிர்ந்தால் அனைத்தும் சாத்தியம் என்று இன்னும் ஆழமாக மனதிற்குள் பதிந்தது. 

என் தோழியின் பெயரை மைக்கில் அழைத்தார்கள். எங்கள் இருவருக்கும் படபடப்பு அதிகமானது. ஒரு மருந்து சீட்டை வாங்கிக்கொண்டு பரிசோதனை கூடத்திற்குச் சென்றோம். செல்லும் வழியில் இலை கீழே விழுந்து, தரையில் உரசும் சத்தத்தை முதல் முதலாக என் காதுகள் கேட்டன. பரிசோதனை கூடத்திற்குள் இருந்து வீல்சேரில் ஒரு பெரியவர் வந்தார். யூனிபார்ம் அணிந்த ஒருவர் அவரின் ஆடையை சரி செய்து, குடிக்க தண்ணீர் கொடுத்து வீல்சேரில் கால் வைக்கும் பகுதியை சரிசெய்து நகர்த்தினார். அருகில் இருந்த தன் மகனின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டார். என் தோழி பரிசோதனைக்காக உள்ளே செல்ல, நான் வெளியே காத்திருந்தேன்.

எங்களுக்கு அடுத்தபடியாக வரிசையில் வயதானவர் ஒருவர் காத்திருந்தார். தன் அம்மாவுடன் வந்திருந்த பெண் அந்தப் பெரியவரிடம், 'ஐயா, நாங்க வெளியூரு. ராத்திரி கிளம்பணும்... நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா நாங்க முதல்ல டெஸ்ட்டுக்கு கொடுத்துட்டு போகட்டுமா' எனக் கேட்டாள். லேசாகத் தலையை அசைத்தார் அவர். 'எதையும் பார்க்காம, யாரையும் யோசிக்காம ஓடி, ஓடி உழைச்சேன். எதையும் அனுபவிக்கல. இப்போ நோய் வந்துருச்சு. இனி ஓடி என்ன பண்ணப்போறேன். தாராளமா போங்க' என வீல்ச்சேரில் அமர்ந்தபடி முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் கூறியபோது, இத்தனை ஓட்டமும் எதற்கு என்ற கேள்வி என்னையும் தொற்றிக்கொண்டது. 

இனி ஓடி என்ன பண்ணப்போறேன்?
இனி ஓடி என்ன பண்ணப்போறேன்?

பரிசோதனையெல்லாம் முடிந்தது. ரிசல்ட் நெகட்டிவாக இருந்தால் நல்லது என வேண்டிக்கொண்டோம். அங்கிருந்த கடையில் நின்று கொண்டிருந்தோம். "எவ்வளவு செலவு ஆனாலும் பாத்துக்கலாம். காசு எப்போ வேணும்னாலும் சம்பாதிக்கலாம். இப்போ நீ தான் முக்கியம். இவ்வளவு நாள் ரெண்டு பேரும் வேலை பார்த்தோம். இப்போ நீ ரெஸ்ட் எடு. நான் பார்த்துக்குறேன்" என்ற ஒரு பெண்ணின் குரல் கேட்டது. அவரின் முகத்தை பார்க்காமலே அவர் மீது மரியாதை வந்தது. மெதுவாக திரும்பினேன். கழுத்தில் கட்டு கட்டியிருந்த தன் கணவரை தோளில் தாங்கி, கைகளில் ஸ்கேன், எக்ஸ்ரே என மருத்துவப் பையுடன் நின்று கொண்டிருந்தார். ஜூஸ் டம்ளரை வாங்கி தன் கணவருக்கு ஜூஸ் கொடுத்த விதம் அவர்களுக்குளான காதலைச் சொல்லாமல் சொன்னது. பிரச்னை வரும் சூழலில், 'விடு பாத்துக்கலாம்' என்று சொல்லும் இணை பெண்களுக்குக் கிடைப்பது வரம் என்றால்; ஆண்களுக்கு கிடைப்பது பலம். தாயுமானவள் அனைத்துமாகிறாள். இதை மனது அசை போடும் போதே தோழியில் பெயரை மீண்டும் மைக்கில் அழைத்தார்கள். 

எல்லா கடவுளின் பெயரையும் சொல்லிக்கொண்டே அந்த அறையில் நுழைந்தோம். 'பயப்படுற மாதிரி எதுவும் இல்ல. ஆனாலும் மூணு மாசம் கழிச்சு ஒரு டெஸ்ட் எடுத்துருங்க. மத்தபடி எல்லாம் நார்மல்தான்' என்று சொல்லும்போது ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டோம். நாங்கள் மருத்துவர் அறையில் இருந்து வெளியே வரும் போது, 'ஏம்மா, ஒரு போன் பண்ணிக்கட்டும்மா, என் மக மருந்து வாங்க போச்சு. டாக்டர் ஏதோ பேசணும்னு சொல்றாங்க. போன் பண்ணி, என் பொண்ணை இங்க வர சொல்லும்மா' என ஒருவர் உதவிகேட்டார். அவர் சொன்ன நம்பருக்கு டயல் செய்து அவரின் அம்மா பெயரைச் சொல்லும்போது, " எங்கம்மா தாங்க. என்னாச்சு அவங்களுக்கு?" என எதிர்முனையில் படபடத்தவர் போனை கட் செய்யாமலே ஓடி வந்தது மனதை இன்னும் உலுக்கியது. எங்களுக்கு பிரச்னை இல்லைனாலும் அதற்காக சந்தோசப்பட்டுக் கொள்ள முடியவில்லை. அந்த இடத்தைக் கடக்க அவ்வளவு சிரமமாக இருந்தது. எதற்கும் சில மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது என்று முடிவு எடுத்துக்கொண்டேன்.

உலகம் அழகானது - அந்தப் பலூன் சிறுமி!
உலகம் அழகானது - அந்தப் பலூன் சிறுமி!

நாளைய சூழல் எப்படி மாறும் என்பது நிச்சயமற்றது. இந்த நிமிசத்தை வாழ்ந்தே ஆக வேண்டும். காசை மட்டும் வெச்சு உலகத்தில் எதுவும் பண்ண முடியாது. சம்பாதிக்க வேண்டியது மனித அன்பைத்தான் என்பதையெல்லாம் அசை போட்டுக்கொண்டே வெளியே வந்தேன். வாழ்க்கை சற்றே நிதானப்பட்டது. மருத்துவமனையின் வாசலில் ஒருவர் பலூன் விற்றுக்கொண்டிருந்தார். ஒரு சிறுமி சிரித்துக் கொண்டிருக்கிறாள். மரங்கள் தங்கள் இலையை அழகாக உதிர்த்து யாரையோ வரவேற்கிறது. காலையில் பதட்டத்துடன் நுழைந்த இடம் இப்போது நிதாமாகத் தெரிந்தது. நாளை என்பது நிரந்தரம் இல்லை. இதோ இந்த நிமிடத்தை, நொடியை கொண்டாடித் தீர்ப்போம். அன்பு செய்வோம். சிக்னலில் காத்திருந்த எங்களுக்கு பச்சை நிற சிக்னல் கிடைத்தது. புது எண்ணங்களுடன் அடுத்த பாதை தொடர்ந்தது.

உங்கள் பயணமும் மகிழ்ச்சியுடன் தொடங்கட்டும்.

`அம்மா... எந்திரிம்மா...' - திடீரென இறந்த தாய்; அப்பாவைக் காப்பாற்ற தேர்வெழுதிய மகள்

பட்டுக்கோட்டை அருகே உள்ள வெட்டுவாக்கோட்டை, ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ராஜேந்திரன் - கலா. இவர்களின் மூன்றாவது மகள் காவியா (17). இவர் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படி... மேலும் பார்க்க

நிறைவேறாத தந்தையின் ஆசை; கோவை டு சென்னை விமானத்தில் பறந்த முதியவர்கள்; நெகிழ்ச்சி சம்பவம்

திருப்பூரைச் சேர்ந்த பனியன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பாலன். சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர். தன் தந்தையை விமானத்தில் அழைத்துச் செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அது நிறைவேறாமல் போனது. ... மேலும் பார்க்க

UPSC-ல் தேர்ச்சி பெற்றும் நிராகரிப்பு; 15 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி வென்ற மாற்றுத்திறனாளி!

UPSC தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் பணி நியமனமின்றி நிராகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி, 15 வருட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு வெற்றி பெற்றிருக்கிறார். பார்வைக் குறைபாடுள்ள ஷிவம் குமார் ஸ்ரீவஸ்தவா, 2008-ம்... மேலும் பார்க்க

`அவர்கள் யாரையுமே எனக்குத் தெரியாது..' - 900 பேரின் மில்லியன் டாலர் கடனை அடைத்த ஹாலிவுட் நடிகர்!

இங்கிலாந்து தெற்கு வேல்ஸில் உள்ள டாடா ஸ்டீல் ஆலை கடந்த செப்டம்பர் மாதம் மூடப்பட்டது. இதனால், அந்த ஆலையில் பணிபுரிந்த கிட்டதட்ட 2,800 பேர் வேலையிழந்தனர். இதனால், ஆலை மூடலுக்கு பெரியளவில் எதிர்ப்பு எழுந... மேலும் பார்க்க