செய்திகள் :

`அம்மா... எந்திரிம்மா...' - திடீரென இறந்த தாய்; அப்பாவைக் காப்பாற்ற தேர்வெழுதிய மகள்

post image

பட்டுக்கோட்டை அருகே உள்ள வெட்டுவாக்கோட்டை, ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ராஜேந்திரன் - கலா. இவர்களின் மூன்றாவது மகள் காவியா (17). இவர் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில் காவியா தேர்வு எழுதி வந்தார். இந்த நிலையில் இன்று காலை காவியாவின் அம்மா கலா நெஞ்சு வலி ஏற்பட்டு திடீரென இறந்துவிட்டார். கலாவின் திடீர் இறப்பு அந்தக் குடும்பத்தை நிலையகுலையச் செய்தது.

அம்மா உடலை பார்த்து கதறும் மகள் காவியா

காவியா தேர்வு எழுத முடியுமா என்பதும் கேள்விக்குறியானது. `படிப்புதான் உன்னை காப்பாத்தும், நான் படிச்சு நல்ல நிலைக்கு வரணும்னு அம்மா அடிக்கடி சொல்லிக்கிட்டே இருக்கும். அம்மா ஆசைப்பட்டபடி நான் படிக்கணும். அதனால இன்னைக்குத் தேர்வு எழுதப்போறேன்'னு காவியா சொன்னதைக் கேட்டு உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். கலா உடல் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டது. உறவினர்கள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையே காவியா தேர்வு எழுதச் செல்வதற்குத் தயாராகினார். யூனிபார்முடன் அம்மா உடல் வைக்கப்பட்ட பெட்டிக்கு முன் வந்து நின்றவர், `நான் பரிட்சை எழுதப்போறேன் என்னை வழியனுப்ப எந்திரிம்மா' எனக் கண்ணாடி பெட்டியில் சாய்ந்து கதறினார். கூடியிருந்த உறவினர்களும் காவியாவை தேற்ற முடியாமல் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது. அம்மா இறந்ததை கேள்விபட்ட காவியாவின் நெருங்கிய தோழிகளும் அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது காவியாவைக் கட்டியணைத்து ஆறுதல் கூறினர். தேர்வு எழுத காவியாவை அழைத்தனர்.

தேர்வு எழுத புறப்படும் காவியா

இதையடுத்து உறவினர் ஒருவர் தேர்வு எழுதுவதற்காக டூவீலரில் காவியாவை அழைத்து சென்று பள்ளியில் விட்டார். காவியாவும் தேர்வெழுதச் சென்றார். இது குறித்து காவியாவின் உறவினர்கள் கூறுகையில், "காவியாவுக்கு இன்னைக்கு பயாலஜி தேர்வு நடக்குது. அம்மா காலில் விழுந்து வணங்கிவிட்டு தான் தினமும் தேர்வு எழுதப் போனாள். திருநீர் பூசி விட்டு நல்லா எழுதுமான்னு அவளை அவங்க அம்மா அனுப்பி வைத்தார். ஆனால் அவர் இன்னைக்கு காவியாகூட இல்ல. இருந்தாலும் அம்மா ஆசைப்பட்ட படி படிக்கணும் என்பதற்காக காவியா அம்மா இறந்த நிலையிலும் தேர்வு எழுதச் சென்றுள்ளார்.

இது எங்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும், காவியாவின் செயல் எங்களை நெகிழவும் வச்சிருக்கு. காவியாவுக்கு ஒரு அக்கா, அண்ணன் உள்ளனர். அவரின் அப்பா ராஜேந்திரன் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி. அக்காவிற்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. அண்ணன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். படித்து ஆளாகி அப்பாவை நல்லா கவனிச்சுக்கணும்னு காவியாகிட்ட அம்மா சொல்லிக்கிட்டே இருப்பாங்க.

மாணவி காவியாவின் அம்மா கலா

அதை மனசுல வச்சுக்கிட்டு தன்னால் குடும்பதுக்கு சுமை வந்திடக்கூடாது என்பதை நினைத்து அம்மா இறந்த வலியைத் தாங்கிக் கொண்டு தேர்வு எழுதப் போயிருக்கா" என்றனர். காவியா கூறுகையில், "தினமும் என்னை வழியனுப்பிய அம்மா இன்னைக்கு எங்கூட இல்ல. படிப்பு தான் நம்மளோட வாழ்க்கையை மாத்தும்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அவங்க இனி எங்களுடன் இல்லை என்கிற சோகத்தை தாங்க முடியவில்லை. இந்தத் துயரமான சூழலிலும் அம்மா ஆசைப்பட்டதை நிறைவேற்ற போறேன். படிப்பாக அம்மா எப்போதும் என்னுடன் இருப்பாங்க" என்றார்.

நிறைவேறாத தந்தையின் ஆசை; கோவை டு சென்னை விமானத்தில் பறந்த முதியவர்கள்; நெகிழ்ச்சி சம்பவம்

திருப்பூரைச் சேர்ந்த பனியன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பாலன். சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர். தன் தந்தையை விமானத்தில் அழைத்துச் செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அது நிறைவேறாமல் போனது. ... மேலும் பார்க்க

UPSC-ல் தேர்ச்சி பெற்றும் நிராகரிப்பு; 15 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி வென்ற மாற்றுத்திறனாளி!

UPSC தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் பணி நியமனமின்றி நிராகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி, 15 வருட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு வெற்றி பெற்றிருக்கிறார். பார்வைக் குறைபாடுள்ள ஷிவம் குமார் ஸ்ரீவஸ்தவா, 2008-ம்... மேலும் பார்க்க

`அவர்கள் யாரையுமே எனக்குத் தெரியாது..' - 900 பேரின் மில்லியன் டாலர் கடனை அடைத்த ஹாலிவுட் நடிகர்!

இங்கிலாந்து தெற்கு வேல்ஸில் உள்ள டாடா ஸ்டீல் ஆலை கடந்த செப்டம்பர் மாதம் மூடப்பட்டது. இதனால், அந்த ஆலையில் பணிபுரிந்த கிட்டதட்ட 2,800 பேர் வேலையிழந்தனர். இதனால், ஆலை மூடலுக்கு பெரியளவில் எதிர்ப்பு எழுந... மேலும் பார்க்க

கடலூர்: மூளைச் சாவடைந்த இளைஞர்; இறந்தும் ஆறு பேருக்கு மறுவாழ்வு - அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்!

கடலூர் மாவட்டம், புவனகிரியை சேர்ந்த தமிழொளி மற்றும் லீலா தம்பதியின் மகனான சரண் (வயது 20). புதுச்சேரியில் ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பல் மருத்துவம் பயின்று வந்தார். கடந்த 13-ஆம் தேதி இரவு ப... மேலும் பார்க்க