கடலூர்: மூளைச் சாவடைந்த இளைஞர்; இறந்தும் ஆறு பேருக்கு மறுவாழ்வு - அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்!
கடலூர் மாவட்டம், புவனகிரியை சேர்ந்த தமிழொளி மற்றும் லீலா தம்பதியின் மகனான சரண் (வயது 20). புதுச்சேரியில் ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பல் மருத்துவம் பயின்று வந்தார். கடந்த 13-ஆம் தேதி இரவு புவனகிரியில் இருந்து தனது தந்தை தமிழொளியுடன் சிதம்பரம் நோக்கி அரசு பேருந்தில் சென்றுள்ளார். பேருந்து இறுக்கை சற்று கோணலாக இருந்ததால் படிக்கட்டில் வந்து நின்றுள்ளார். பேருந்து வேகத்தடை மீது ஏறி இறங்கியதில் சரண் படியிலிருந்து தவறி விழுந்ததால் தலையில் பலத்த காயம் அடைந்து சுயநினைவின்றி இருந்துள்ளார் .உடனடியாக அருகில் உள்ள அரசு சிதம்பரம் ராஜமுத்தையா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி செய்த பின்பு காலப்பட்டு பிம்ஸ் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவர் மூளைசாவு அடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்டார். மூளை சாவடைந்த சரணின் குடும்பத்தினர் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு உடலுறுப்பு தானம் ஒருங்கிணைப்பாளர் பொன்ராஜ் ,"சரண் அவர்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி இரவு மூளை சாவடைந்தார். அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்ய அவருடைய குடும்பத்தினர் முன் வந்தனர். பின்பு தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் மூலம் சரணுடைய இதயம் மற்றும் இதய வால்வுகள், கல்லீரல் ,இரண்டு கண்கள் மற்றும் மண்ணீரல் ஆகிய உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதனால் ஆறு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்" என கூறினார்.

இது குறித்து பிரிவில் வாடும் சரணின் தந்தை தமிழொளி, "தினமும் கல்லூரிக்கு சென்று வீட்டிற்கு வந்து விடுவான். நானும் சரணும் தான் சிதம்பரம் செல்லும் செல்லும் வழியிலேயே கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த துயர சம்பவம் அரங்கேறிவிட்டது. எப்படியாவது காப்பாற்றி விடுவார்கள் என நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் இறைவன் சரணை அழைத்து சென்றுவிட்டார். இறந்தபோதும் ஆறு பேருக்கு மறுவாழ்வு தந்துவிட்டு மறைந்துள்ளான். அவனது கடைசி வார்த்தைகள் இன்னும் என்னது காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அவனுடைய முகம் இன்னும் எனது கண்களை விட்டு மறையவில்லை" என்ற அவரின் துயர வார்த்தை கண்கலங்க வைத்தது.

உடல் உறுப்பு தானம் செய்த பின் அரசு சார்பில் மலர்வளையம் வைத்து அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது, சரணின் உடல். இறந்தும் ஆறு பேருக்கு மறுவாழ்வு அளித்த சரணின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என அவரின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.