கவுன்சிலரிடையே மோதல்; மேசையை தூக்கிவீசி அமளிதுமளி- களேபரமான சிவகாசி மாமன்ற கூட்டம்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தீர்மானம் குறித்து விவாதம் தொடங்கியபோது, பா.ஜ.க. உறுப்பினர் குமரிபாஸ்கர், மாநகராட்சி கூட்டத்தில் தொடர்ந்து தேசிய கீதம் அவமரியாதை செய்யப்படுகிறது அதற்கு, மேயர் விளக்கம் அளிக்க வேண்டும் என கையில் பதாகை ஏந்தி கேள்வி எழுப்பினார். உறுப்பினரின் இந்த கேள்விக்கு, அவருக்கு அருகில் இருந்த காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ரவிசங்கர், 'அதெல்லாம் விளக்கம் கொடுத்தாச்சு' என கூறியதாக கூறப்படுகிறது.

மாமன்ற உறுப்பினர் ரவிசங்கரின் பேச்சால் ஆத்திரமடைந்த குமரிபாஸ்கர், "நான் உங்களிடம் கேள்வி கேட்கவில்லை, மேயரிடம் கேள்வி கேட்டேன்" என காட்டமாக கூறினார். இதனால், மாமன்ற உறுப்பினர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தநிலையில், பா.ஜ.க. உறுப்பினர் குமரி பாஸ்கர் கையில் இருந்த பதாகையை காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிடுங்கி எறிந்தார்.
இதனால் வாக்குவாதம் கடந்து உறுப்பினர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து கவுன்சிலர் கூட்டம் பரபரப்பானது. மோதல் போக்கு கைமீறி போவதை தடுக்கும் நோக்கில் சக கவுன்சிலர்கள் இருவரையும் தடுத்தனர். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் உறுப்பினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.

இதன்பின்னர், மன்ற பொருளின் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்றது. அப்போது, தி.மு.க. உறுப்பினர் ஸ்ரீனிகா மேயரிடம் கேள்வி எழுப்பியதற்கு, அவருக்கு அருகே இருந்த மற்றொரு தி.மு.க. உறுப்பினர் ஜெயினுலாபுதீன் பதில் அளித்தார். இதற்கு பதில் பேசிய ஸ்ரீனிகா, 'நான் மேயரிடம் கேள்வி கேட்கிறேன். உங்களிடம் கேட்கவில்லை' என கோபமாக கூறினார். இதனால், தி.மு.க. கவுன்சிலர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கவுன்சிலர்கள் கூட்டம் மீண்டும் பரபரப்பான நிலையில் மற்ற கவுன்சிலர்கள் அனைவரும் கூட்டாக, "மாமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கான பதில்களை மேயர் அல்லது ஆணையாளர் மட்டும் அளிக்க வேண்டும், மற்றவர்கள் பதில் அளிக்க வேண்டாம்" என்று கூறினர். இதனால், கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதில் தி.மு.க. கவுன்சிலர் ஜெயினுலாபுதீன், மேஜையை கீழே தள்ளி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால், அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் உள்ளே வந்த போலீஸார், மாமன்ற உறுப்பினரிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது. மாமன்ற கூட்டம் நிறைவடைந்து வெளியே வந்த பா.ஜ.க. கவுன்சிலர் குமரி பாஸ்கரை, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சூழ்ந்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மன்றக் கூட்டத்தை தொடர்ந்து மாநகராட்சி அரங்குக்கு வெளியேவும் கவுன்சிலர்கள் மோதல் போக்குடன் நடந்து கொண்டனர். இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு கவுன்சிலர்களை தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தாலீ, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.