India - Pakistan : `சீனா ஜெட்டை இந்தியா பயன்படுத்தியதா?' - பாகிஸ்தான் கேள்வியும் சீனாவின் பதிலும்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை இந்தியா புதன்கிழமை ஏவுகணைகள் மூலம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயாரில் தாக்கியது. இந்தத் தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்கள் மீது குறிவைத்து தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, இந்தியா சீனா ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
சீனா, பாகிஸ்தானின் முக்கிய ஆதரவாளராகவும், அதன் மிகப்பெரிய ஆயுத சப்ளையராகவும் இருக்கிறது. உலகளாவிய ஆயுத சப்ளைகளை கண்காணிக்கும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, 2019-2023 வரை பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதியில் சுமார் 82 சதவிகிதம் சீனாவிலிருந்து வந்தவை.
பதற்றமான சூழல்
இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனில் வெற்றி பெற்றதன் 80-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்க, சீன அதிபர் ஜி ஜின்பிங் புதன்கிழமை நான்கு நாள் பயணமாக ரஷ்யா செல்லவிருந்தார். இந்த நிலையில்தான், பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த தாக்குதலில், பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேல் ஜெட் விமானங்கள் உட்பட எல்லையில் உள்ள ஐந்து இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. இதற்கு சீனாவின் J-10C ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக்டார் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் ஆஃப் பாகிஸ்தான் செய்தி குறிப்பிட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் பெய்ஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, இந்தியா சீன ஜெட் விமானங்களை பயன்படுத்தியதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ``இந்தியாவும் பாகிஸ்தானும் இந்தச் சூழலை மேலும் மோசமாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். சீன ஜெட் விமானங்கள் இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது" எனக் குறிப்பிட்டிருக்கிறார். சீனா விமானங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து இதுவரை இந்தியாவும் அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்த வில்லை.