Travel Contest : அயல்நாடு செல்வோர் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை! - அனுபவ...
NCP : `அஜித் பவார் - சுப்ரியா சுலே முடிவு செய்வார்கள்’ - அணிகள் இணைவதில் இறங்கி வந்த சரத் பவார்
தேசியவாத காங்கிரஸ் கடந்த 2023-ம் ஆண்டு திடீரென இரண்டாக உடைந்தது. சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் கட்சியை இரண்டாக உடைத்ததோடு, பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் தன்னிடம் இருப்பதாக கூறி கட்சியையும், சின்னத்தையும் தனது வசம் எடுத்துக்கொண்டார்.
அதன் பிறகு நடந்த மக்களவைத் தேர்தலில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணி அமோக வெற்றி பெற்றது. ஆனால் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் சரத் பவார் அணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் சரத் பவார் அணியை அஜித் பவார் அணியுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கை கட்சி நிர்வாகிகள் மத்தியில் இருந்து வந்தது. ஆரம்பத்தில் இதற்கு சரத் பவார் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால் இப்போது சரத்பவார் தனது நிலைப்பாட்டை படிப்படியாக மாற்றிக்கொண்டுள்ளார்.

மனம் மாறிவிட்டாரா சரத் பவார்?
சரத் பவாருக்கு வயதாகிவிட்டதால் கட்சியின் செயல்பாட்டை தனது மகள் சுப்ரியா சுலேயிடம் ஒப்படைத்து இருக்கிறார். இந்நிலையில் இரு அணிகளின் இணைப்பு குறித்து சரத் பவார் அளித்துள்ள பேட்டியில், ''எதிர்காலத்தில் இரு அணிகளும் ஒன்று சேர வாய்ப்பு இருக்கிறது. இது போன்ற முடிவுகளை எடுப்பதில் நான் ஈடுபடுவதில்லை. சுப்ரியா சுலேயும், அஜித் பவாரும் அமர்ந்து பேசி முடிவு செய்வார்கள். அது போன்ற ஒரு இணைப்பு நடந்தால் அது யாருக்கும் ஆச்சரியத்தை கொடுக்காது'' என்று தெரிவித்தார். கட்சி உடைந்த பிறகு முதல் முறையாக சரத்பவார் இரு அணிகளின் இணைப்பு குறித்து பேசி இருக்கிறார்.
சரத்பவாரின் அறிவிப்புக்கு அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் சகன் புஜ்பால் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார். இது நல்ல ஒரு அறிகுறி என்றும், இரு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் சரத்பவார் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் இது குறித்து கூறுகையில், ''உடனடியான இரு அணிகளின் இணைப்பு நடைபெறும் என்று எனக்கு தெரியவில்லை. சரத் பவார் இது தொடர்பாக தான் தெரிவித்த கருத்துக்கு விளக்கம் அளிப்பார்'' என்றார்.
தனித்து விடப்படும் காங்கிரஸ்?
ஏற்கனவே சிவசேனாவிலும் பிரிந்து இருக்கும் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே சகோதரர்கள் இணைந்து செயல்பட முதல் கட்ட நடவடிக்கையை எடுத்து இருக்கிறார்கள். மராத்திக்காகவும், மகாராஷ்டிராவிற்காகவும் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியான மகாவிகாஷ் அகாடி இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சரத்பவார் அணி அஜித் பவார் அணியுடன் இணைந்துவிட்டால் அக்கட்சி பா.ஜ.க கூட்டணியோடு சென்றுவிடும். மகாவிகாஷ் அகாடியில் உத்தவ் தாக்கரேயும், காங்கிரஸ் கட்சியும்தான் இருக்கும். உத்தவ் தாக்கரேயுடன் ராஜ்தாக்கரே கட்சி கூட்டணி வைக்கும்பட்சத்தில் சிவசேனா(உத்தவ்) கட்சியும் தனித்து போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. இதனால் காங்கிரஸ் தனியாக கழற்றி விடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒரு மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை அறிவிக்கும்படி மகாராஷ்டிரா தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருக்கிறது. இதனால் மகாராஷ்டிரா அரசியல் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை விரைவில் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்பாக எந்த கட்சி எந்த அணியில் இருக்கிறது என்பதை முடிவு செய்யவேண்டிய நிலையில் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அதற்கு சரத்பவார் முதல் அடியை எடுத்து வைத்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை தனது மகளிடம் ஒப்படைத்து இருக்கிறார்.