``பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயற்சி..'' - இந்திய அரசு தகவல்!
நேற்றைய இரவு பாகிஸ்தான் மற்றும் இந்தியா எல்லையில் தீவிரமான துப்பாக்கிச் சூடு, பீரங்கி தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடந்துள்ள நிலையில், இன்றைய நிலவரம் மற்றும் தயாரிப்புகள் குறித்து விளக்க இந்திய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.
இந்திய ராணுவம் தெரிவித்திருப்பதன்படி, வியாழன் இரவு மற்றும் வெள்ளி காலையில், ஜம்மு, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்திய இராணுவம் பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகளை முறியடித்ததுடன், அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

இன்றைய செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை சார்பில் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கலந்துகொண்டார். ராணுவம் சார்பாக சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் கலந்துகொண்டனர்.
சோபியா குரேஷி பேசுகையில், "போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியாவின் ராணுவ நிலைகள் மீது நேற்று பாகிஸ்தான், துருக்கியின் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயற்சித்தது. இந்தியா அவற்றை வழிமறித்து அழித்தது.
பாகிஸ்தான் நேற்றைய தினம் அதன் வான் வழித்தடத்தை மூடவில்லை. பயணிகள் விமானங்களை அனுமதித்த அதே வேலையில் துருக்கிய ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின.
பாகிஸ்தான்தான் பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி தாக்குதல் நடத்த முயன்றது. நேற்று இரவில் இந்திய ராணுவ தளங்களை தாக்க முயன்றதில், சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்களை ஆராய்ந்து வருகிறோம்." எனக் கூறியுள்ளார்.