ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடைபெறும்?
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் ஒரு வாரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் துல்லியத் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இதன் விளைவாக, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் அதிகரித்து, இரு தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க: ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தம்! ரசிகர்கள் வெளியேற்றம்!
இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல் காரணமாக இந்தியாவின் எல்லோயோர மாநிலங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியது. பஞ்சாப் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் இடையேயான நேற்றையப் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டு, ரசிகர்கள் மற்றும் வீரர்கள் உடனடியாக திடலை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
பிசிசிஐ கூறுவதென்ன?
ஐபிஎல் தொடரில் மொத்தமுள்ள 74 போட்டிகளில் இதுவரை 58 போட்டிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. இன்னும் 16 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட வேண்டியிருக்கிறது. இந்தப் போட்டிகளை நடத்தி முடிக்க 10 - 12 நாள்கள் இருந்தால் போதுமானதாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டது தொடர்பாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் ஐபிஎல் தொடரை தொடர்ந்து நடத்துவது மிகவும் கடினம். அனைத்து சூழல்களும் இயல்பாக இருக்கும்போது மட்டுமே போட்டிகளை தொடர முடியும். போர்ப் பதற்றமான சூழலில் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்களது நாடுகளுக்கு திரும்ப நினைப்பது இயல்பான விஷயம். ஐபிஎல் தொடரைக் காட்டிலும் தேசத்தின் நலனே மிகவும் முக்கியம். நாங்கள் தற்போதைய சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார்.
மீண்டும் போட்டிகள் எப்போது?
சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அதிக அளவில் நடைபெறாத மார்ச் - மே மாத இடைவெளியில் ஐபிஎல் தொடரை பிசிசிஐ நடத்தி வருகிறது. இருப்பினும், இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தின் காரணத்தினால் மீதமுள்ள போட்டிகள் மே மாதத்தில் நடத்தி முடிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
மீதமுள்ள போட்டிகள் மே மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்படாவிட்டால், சர்வதேச கிரிக்கெட் தொடர் அட்டவணைகள் பாதிக்கப்படும் . வெளிநாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக செல்ல நேரிடும்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. அந்த அட்டவணையில் மாற்றம் செய்வது கடினம். இந்த டெஸ்ட் தொடர் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனால், ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை இந்த இடைவெளியில் நடத்த முடியாது.
இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?
மீதியுள்ள போட்டிகளை நடத்தி முடிக்க செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து நான்காவது வாரம் வரை மட்டுமே சிறந்த தெரிவாக பிசிசிஐ முன் உள்ளது. இந்த கால இடைவெளியில் எஞ்சியுள்ள போட்டிகளை நடத்தி முடிப்பதற்காக மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 4 ஆம் தேதியுடன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்துவிடும் என்றாலும், அந்த மாதத்தில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெறவுள்ளது. அதனால், அந்த கால இடைவெளியில் ஐபிஎல் தொடரை நடத்தி முடிப்பது கடினம்.
அதேபோல, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்தும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31 வரை நடைபெறவுள்ளது. அந்தத் தொடரில் இடம்பெற்று விளையாடும் வீரர்களும் ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ளனர். அதனால், ஆகஸ்ட்டில் ஐபிஎல் தொடரை நடத்தி முடிப்பது கடினம்.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரும் ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது. அதனால், ஆகஸ்ட்டில் ஐபிஎல் தொடரின் மீதியிருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டால், அந்த இரண்டு நாட்டின் வீரர்களும் விளையாடுவது கடினம்.
மீதமுள்ள போட்டிகளை செப்டம்பரில் நடத்தி முடிப்பதுதான் பிசிசிஐக்கு இருக்கும் ஒரே சிறந்த தெரிவு. ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 22 வரை கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெறவுள்ளது. அதில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முக்கிய வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுவார்கள். இருப்பினும், செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு கணிசமான அளவில் வீரர்கள் இருப்பார்கள்.
இதையும் படிக்க: ரோஹித் சர்மாவின் ஓய்வு முடிவில் பிசிசிஐக்கு எந்த தொடர்பும் இல்லை: பிசிசிஐ துணைத் தலைவர்
இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 14 வரை நடைபெறவுள்ளது. அதனால், செப்டம்பரின் முதல் இரண்டு வாரங்களுக்கு அந்த நாட்டு வீரர்கள் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவது கடினம். இருப்பினும், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளின் கிரிக்கெட் வாரியங்களிடம் பிசிசிஐ வேண்டுகோள் வைத்து, அந்த நாட்டு வீரர்களை ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாடக் கூறலாம்.
செப்டம்பர் மாத இறுதியில் இந்தியாவுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான தொடர்கள் தொடங்கிவிடும். செப்டம்பர் இறுதிக்குப் பிறகு, இந்திய அணி அக்டோபர் - நவம்பரில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. அதனால், செப்டம்பர் மாதமே ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை நடத்தி முடிக்க சிறந்த தெரிவாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பரில் நடத்த முடியாத சூழல் ஏற்படும் பட்சத்தில், அந்த போட்டிகளை டிசம்பர் மாதத்தில் நடத்தலாம். ஆனால், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெறும் என்பதால், அந்த அணி வீரர்களால் மீதமுள்ள போட்டிகளில் விளையாட முடியாது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்ற சூழல் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை பொருத்தே ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை நடத்தி முடிப்பது தொடர்பான முடிவுகள் பிசிசிஐ-யால் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.