ரசிகர்களுக்கு ஐபிஎல் டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் அணிகள்!
ஐபிஎல் தொடர் அடுத்த ஒரு வாரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் பணியை அணிகள் தொடங்கியுள்ளன.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் துல்லியத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியாக தாக்குதல்கள் தொடர்கின்றன.
இதையும் படிக்க: ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடைபெறும்?
போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடரை ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக பிசிசிஐ நிறுத்தி வைத்துள்ளது. இதனால், ஐபிஎல் தொடரில் லக்னௌவில் இன்று லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் கட்டணம் திருப்பியளிப்பு
ஐபிஎல் தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதையடுத்து, ஐபிஎல் தொடருக்காக ரசிகர்களிடம் பெற்ற டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் பணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தொடங்கியுள்ளன.
லக்னௌ மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டிக்காக ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். அந்த டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் பணியை லக்னௌ அணி நிர்வாகம் தொடங்கியுள்ளது.
Update: Tonight’s match at BRSABV Ekana Cricket Stadium has been cancelled. Details regarding ticket refunds will follow. pic.twitter.com/AQlMt4M0z4
— Lucknow Super Giants (@LucknowIPL) May 9, 2025
இது தொடர்பாக லக்னௌ அணி நிர்வாகம் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: எக்னா திடலில் இன்று நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்காக ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் பணிகள் தொடங்கப்படும் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
அதே போல, நாளை (மே 10) ஹைதராபாதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுவதாக இருந்த நிலையில், அந்த போட்டியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, ஹைதராபாத் அணி நிர்வாகமும் ரசிகர்களிடம் பெற்ற டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க: ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தம்! ரசிகர்கள் வெளியேற்றம்!
இது தொடர்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தரப்பில் அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் தற்போதுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, டாடா ஐபிஎல் தொடர் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. நாளை ஹைதராபாதில் நடைபெறவுள்ள போட்டிக்காக ரசிகர்களிடம் பெற்ற டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
:
— SunRisers Hyderabad (@SunRisers) May 9, 2025
In light of the current situation, #TATAIPL2025 has been suspended with immediate effect. Ticket refund details will be communicated shortly. pic.twitter.com/Gw2Qs3FZG0
ஐபிஎல் தொடரில் இதுவரை 58 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதம் 16 போட்டிகள் எஞ்சியிருப்பது குறிப்பிடத்தக்கது.