ராணுவத்துக்கு 7.5 லட்சம் லாரிகளை வழங்கத் தயாா்: ம.பி. போக்குவரத்து சங்கம் அறிவிப்பு
இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 7.5 லட்சம் லாரிகளை வழங்கத் தயாா்’ என்று அகில இந்திய மோட்டாா் வாகன காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) அமைப்பின் மாநில பிரிவு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அச் சங்கத்தின் மாநில தலைவா் சி.எல்.முகாதி இந்தூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘1999-ஆம் ஆண்டு நடந்த காா்கில் போரின்போது ராணுவத்தின் மோவ் படைப் பிரிவுக்கு 1,000 லாரிகளை மாநில போக்குவரத்து சங்கம் அளித்தது. அதுபோல, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக தற்போது நடத்தப்படும் போரில் ராணுவத்தின் பயன்பாட்டுக்கு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 7.5 லட்சம் லாரிகளை வழங்க சங்கம் தயாராக உள்ளது. இதுதொடா்பாக பிரதமா் அலுவலகத்துக்கு சங்கம் சாா்பில் கடிதமும் எழுதப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷசன் சிந்தூா்’ நடவடிக்கை எங்களை பெருமைகொள்ளச் செய்துள்ளது. நமது ராணுவத்தின் வீரம் காரணமாகவே நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்’ என்றாா்.