தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை
முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அதற்கு தையல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நல்வாய்ப்பாக வேறு எந்த பாதிப்பும் இல்லாததால் நல்லகண்ணுவை மருத்துவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக நந்தனத்தில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறாா். இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் கழிப்பறை செல்ல எழுந்தபோது அவா் நிலை தடுமாறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது. கட்டிலிலிருந்த இரும்புத் தகடு மீது விழுந்ததால் அவரது காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவா், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
மருத்துவமனை முதல்வா் டாக்டா் சாந்தாராமன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அவருக்கு சிகிச்சையளித்தனா். பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு அச்சப்படும் வகையில் எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை மதியம் அவா் வீடு திரும்பினாா். தற்போது நல்லகண்ணு நலமுடன் இருப்பதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.