Gold Rate Today : 'பவுனுக்கு ரூ.240..!' - தொடரும் பதற்றத்துக்கு இடையில் இன்றைய ...
Kidney Stone: கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்க முடியுமா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
சிறுநீரகக் கற்கள் உருவாக காரணங்கள்; எப்படிக் கண்டறிவது; சிறுநீரகக் கற்கள் தடுக்க, தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என சொல்கிறார், சிறுநீரகவியல் நிபுணர் என்.ஆனந்தன்.

1. போதுமான அளவு தண்ணீர் அருந்தாமை. குறிப்பாக, கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் நீர் இழப்பு.
2. உடலில் கால்சியம் அளவு அதிகமாக இருப்பது. உணவு, மாத்திரைகள் மூலம் அதிகப்படியான கால்சியம் எடுத்துக்கொள்வது.
3. உடலில் கால்சியம் அளவுகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பாராதைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் இருப்பது.
4. உடல் உழைப்பே இல்லாமல் இருப்பது. குறிப்பாக, படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள்.
5. கர்ப்பக் காலங்களில் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அதிகமான தாதுஉப்புகள், உடலில் தேங்குதல்.
6. உடல்பருமனாக இருப்பவர்களுக்கு, உடலில் சீரம் மற்றும் ஆக்ஸலேட் அளவுகள் அதிகமாக இருப்பது.
7. சிறுநீரகப் பாதையில் ஏற்படும் அடைப்புகள்.
8. வயதான ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி வீங்குதல்.

எளிய ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். இதில், வழக்கத்தை விடவும் மிக அதிக அளவில் வெள்ளை அணுக்கள் இருக்கும். கால்சியம், யூரிக் அமிலம் உள்ளிட்டவை எவ்வளவு இருக்கின்றன என்பதைப் பொறுத்து, என்ன கற்கள் என்பதை அறியலாம்.
சிறுநீர்ப் பரிசோதனையில் கழிவு எவ்வளவு வெளிவருகின்றன என்பதைக் கண்டறியலாம்.
அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின் மூலம் 90 சதவிகிதம் வரை கற்களைக் கண்டறிய முடியும்.
சிறுநீரகத்திலும் சிறுநீரகப் பாதையிலும் கற்கள் வரும் என்பதால், சிலருக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் கற்கள் தெரியாது. இவர்களுக்கு, சி.டி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை தேவைப்படும்.

எலுமிச்சையில், பொட்டாசியம் சிட்ரேட் நிறைந்துள்ளது. எலுமிச்சையை, தொடர்ந்து ஜூஸ் போன்ற ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால், சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்புக் குறையும்.
ரெட் மீட் எனப்படும் ஆடு, மாட்டிறைச்சி சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
சீஸ், பனீர் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து அதிக அளவு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கேரட், பாகற்காய் போன்றவற்றைச் சாப்பிடுவது, சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்.
உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
தினமும் சராசரியாக இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும்.