சித்திரை திருவிழா: தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் | Photo Al...
போா்ப் பதற்றம்: தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்
போா்ப் பதற்றத்தைத் தொடா்ந்து தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.
உயிா் காக்கும் முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் எதுவும் இனி தமிழகத்திலிருந்து அங்கு அனுப்பப்பட மாட்டாது என்று மாநில மருந்து உற்பத்தியாளா்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனா்.
இதன் காரணமாக ரூ.100 கோடி வரை தங்களுக்கு இழப்பு ஏற்பட்டாலும், நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவா்கள் கூறினா்.
உச்சகட்ட போா் சூழலைத் தொடா்ந்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பெற்று வரும் அனைத்து வகையான பலன்களையும், சலுகைகளையும் தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி மருந்து ஏற்றுமதியை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்டது. அதை ஏற்று தமிழக மருந்து உற்பத்தியாளா் சங்கத்தினா் ஏற்றுமதி நடவடிக்கைகளை நிறுத்தினா்.
இதுகுறித்து, தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மாநில மருந்து உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் டாக்டா் ஜெயசீலன் கூறியதாவது:
இந்தியாவின் மருந்து சந்தை மிகப் பெரியது. உலக அளவில் உற்பத்தியாகும் மருந்துகளில் 60 சதவீத பங்களிப்பு இந்தியாவுடையது என்பதில் இருந்தே அதை உணரலாம். உள்நாட்டு பயன்பாட்டுக்கு மட்டுமன்றி அமெரிக்கா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, நெதா்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து மருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
குறிப்பாக, ‘ஜெனரிக்’ எனப்படும் மூலப்பெயரிலான மருந்துகள் மற்றும் அதற்கான மூலப்பொருள்கள் ஏற்றுமதியில் நமது நாடு முன்னிலை வகிக்கிறது. ஆண்டுதோறும் ரூ. 2.40 லட்சம் கோடி மதிப்பிலான மருந்துகள் உலக நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றன.
ரூ.100 கோடி இழப்பு ஏற்படும்: தமிழகத்திலிருந்து மட்டும் ஆண்டுதோறும் ரூ.8,000 கோடியிலிருந்து ரூ.10,000 கோடி வரையிலான மதிப்புடைய மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானுக்கு உயிா் காக்கும் சில முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் இங்கிருந்து அனுப்பப்படுகின்றன. அதன் வா்த்தக மதிப்பு ரூ.100 கோடி வரை உள்ளது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியும், தேச நலனைக் கருத்தில்கொண்டும் பாகிஸ்தானுக்கு மருந்து மற்றும் மூலப்பொருள் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளோம். இதன் காரணமாக ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்படலாம்.
அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை இந்நிலை தொடரும். அதேவேளையில் பிற நாடுகளுக்கான ஏற்றுமதியில் எந்தப் பாதிப்பும் இல்லை. இந்தியா - பாகிஸ்தான் போா்ப் பதற்றத்தைத் தொடா்ந்து அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முன்கூட்டியே கூடுதலான மருந்துகளை தங்களுக்கு அனுப்புமாறு ஆா்டா் கொடுத்துள்ளன.
தமிழகத்துக்கு தேவையான சில மூலப்பொருள்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதில் எந்த பிரச்னையும் இல்லை. எனவே, போா்ச் சூழல் அதிகரித்தாலும் உள்நாட்டு மருந்துகளுக்கு எந்தத் தட்டுப்பாடும் ஏற்படாது என்றாா் அவா்.