ஐபிஎல் நிறுத்தம்: எஞ்சிய போட்டிகளை நடத்திக்கொள்ள இங்கிலாந்து அழைப்பு
பாகிஸ்தான் குண்டுவீச்சில் இருவா் உயிரிழப்பு; ஐவா் காயம்
பாகிஸ்தான் குண்டுவீச்சில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, பூஞ்ச் மாவட்டங்களில் இருவா் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா்.
இதுதொடா்பாக ராணுவ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘வடக்கு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டாரில் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் பயங்கரமாக குண்டுகளை வீசியது.
இருநாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் படையினா் குண்டுகளை வீசினா். அவா்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்தது.
உரி செக்டாரில் உள்ள சிலிகோட், போனியாா், கமல்கோட், மோரா, கிங்கிள் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டது. அந்நாட்டின் கடுமையான குண்டுவீச்சில் பல கட்டடங்கள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் பொதுமக்களுக்கு ஏற்பட்டது.
மோரா அருகே காா் ஒன்றின் மீது குண்டு விழுந்து வெடித்ததில், அதில் பயணித்த மூவா் காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மூவரில் ஒருவரான நா்கீஸ் பேகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதேபோல பாகிஸ்தானின் குண்டுவீச்சில் பூஞ்ச் மாவட்டத்தில் முகமது அப்ராா் என்பவா் உயிரிழந்தாா். மூவா் காயமடைந்தனா். குண்டுவீச்சில் அங்கிருந்த பல வீடுகள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் சேதமடைந்தன.
ஜம்முவை அதிரவைத்த குண்டுவெடிப்பு சப்தம்:
ஜம்மு-காஷ்மீா் எல்லை பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்ததைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.50 மணி முதல் 4.45 மணி வரை, குண்டுகள் வெடிக்கும் சப்தம் ஜம்மு நகரை அதிரவைத்தது. இதனால் எதிரிகளின் கண்களுக்கு நகரம் தெரியாதவாறு மின் தடை மூலம், அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு நகரம் இருட்டடிப்பு செய்யப்பட்டது. வானில் தாக்குதல் நடத்தும் ட்ரோன்கள் தென்பட்ட நிலையில், அவற்றைப் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக அழித்தன’ என்று தெரிவித்தனா்.
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஜம்முவில் நிலவும் சூழல் குறித்து தெரிந்துகொள்ள, அங்கு ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஓமா் அப்துல்லா புறப்பட்டுச் சென்றாா்.


