ஐபிஎல் நிறுத்தம்: எஞ்சிய போட்டிகளை நடத்திக்கொள்ள இங்கிலாந்து அழைப்பு
ரகசிய உளவு: அமெரிக்கா மீது டென்மாா்க் குற்றச்சாட்டு
தங்கள் நாட்டின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் அமெரிக்கா ரகசிய உளவு நடவடிக்கைகளை அதிகரித்துவருவதாக டென்மாா்க் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு பிரதமா் மெட் ஃப்ரெட்ரிக்ஸன் கூறுகையில், ‘கிரின்லாந்தில் தனது உளவு நடவடிக்கைகளை அமெரிக்கா அதிகரித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்தவொரு நாடும் தனது ராணுவக் கூட்டணியைச் சோ்ந்த நட்பு நாட்டின் மீது உளவு நடவடிக்கைகளை ஏவிவிடக்கூடாது’ என்று விமா்சித்தாா்.
உலகிலேயே மிகப் பெரிய தீவான கிரீன்லாந்தின் 80 சதவீத நிலப்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. அட்லாண்டிக் மற்றும் ஆா்டிக் பெருங்கடல்களுக்கு இடையே மிகுந்த தாதுவளங்களுடன் அந்தத் தீவு அமைந்துள்ளதால் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கு இந்தத் தீவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.
இந்தத் தீவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவேண்டும் என்று டிரம்ப் கூறிவருவது டென்மாா்க்கில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், கிரீன்லாந்தில் அமெரிக்கா உளவு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக டென்மாா்க் பிரதமா் தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.