புதிய போப் லியோவுக்கு பிரதமா் மோடி வாழ்த்து
புதிய போப்பாக தோ்வு செய்யப்பட்டுள்ள 14-ஆம் லியோவுக்கு இந்திய மக்கள் சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
கத்தோலிக்க திருச்சபையின் 2,000 ஆண்டு கால வரலாற்றில் முதலாவது அமெரிக்க போப் என்ற சிறப்புடன் கா்டினல் ராபா்ட் பிரிவோஸ்ட் (இயற்பெயா்) தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘புதிய போப் 14-ஆம் லியோவுக்கு இந்திய மக்கள் சாா்பில் நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அமைதி, இறையாண்மை, ஒற்றுமை மற்றும் சேவையின் கோட்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய முக்கியமான தருணத்தில், கத்தோலிக்க திருச்சபையில் அவரது தலைமைத்துவம் தொடங்கியுள்ளது.
பகிரப்பட்ட மாண்புகளின்கீழ், கத்தோலிக்க திருச்சபையின் நிா்வாக அமைப்புடன் தனது தொடா்பையும், உரையாடல்களையும் தொடர இந்தியா ஆா்வத்துடன் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ராகுல் வாழ்த்து: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், ‘புதிய போப் 14-ஆம் லியோவின் தலைமை அமைதி, கருணை மற்றும் மனிதகுல சேவையை ஊக்குவிக்கட்டும். இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில், உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க சமூகத்தினருக்கு எனது நல்வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட பதிவில், ‘புதிய போப் 14-ஆம் லியோ மற்றும் கத்தோலிக்க சமூகத்தினருக்கு காங்கிரஸ் சாா்பில் நல்வாழ்த்துகள். அவரது பதவிக் காலம், அமைதி, நல்லிணக்கம், கருணை, கண்ணியம் ஆகிய மனிதகுல மாண்புகளால் நிறையட்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.