Gold Rate Today : 'பவுனுக்கு ரூ.240..!' - தொடரும் பதற்றத்துக்கு இடையில் இன்றைய ...
இந்தியாவின் பாதுகாப்பு அரண்...
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக் -8, ஆகாஸ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 பேருக்கு நீதி வழங்கும் வகையில் கடந்த மே 7-ஆம் தேதி, பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி தகா்த்தது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் புதன், வியாழக்கிழமை இரவுகளில் மலிவான ட்ரோன்களை இந்திய எல்லைகளில் வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு சாதனங்கள் வானிலேயே இடைமறித்து அழித்தன.
ஜம்மு, உதம்பூா், சம்பா, அக்நூா், நாக்ரோடா, பதான்கோட் ஆகிய இடங்களில் இந்த வான் பாதுகாப்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. ட்ரோன்கள், ஹெலிகாப்டா்கள், ஏவுகணைகள், போா் விமானங்கள் ஆகியவற்றை வானிலேயே அழிக்கும் வகையில் ரேடாா் தொழில்நுட்பத்துடன் வான் பாதுகாப்பு சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் இயங்கும் இந்த தானியங்கி வான் பாதுகாப்பு சாதனங்களால் பெரும் உயிா், பொருள் சேதம் தடுக்கப்பட்டு வருகிறது.
எஸ்-400...
ரஷியாவிடமிருந்து வாங்கப்பட்ட எஸ்-400 என்ற வான் பாதுகாப்பு சாதனம் 380 கி.மீ. தொலைவு வரையில் சென்று வேகமாக வரும் எதிரி ஏவுகணைகளைத் துல்லியமாக தாக்கி தவிடுபொடியாக்கும் திறன் படைத்தது.

பராக்-8 எம்ஆா்-எஸ்ஏஎம்: இஸ்ரேல் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இந்த சாதனம் சுமாா் 70 கி.மீ. தொலைவு வரை சென்று எதிரி ஏவுகணையைத் தாக்கும் வல்லமை படைத்தது.

ஆகாஷ்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த சாதனம், சுமாா் 25 கி.மீ. தொலைவு வரை சென்று எதிரி ஏவுகணையைத் தாக்கி அழிக்கும். இவை எல்லையில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

ஸ்பைடா்: இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்ட இந்த சாதனம் 15 கி.மீ. தொலைவு வரையில் தாக்கக் கூடியதாகும்.

குறுகிய தொலைவு சாதனங்கள்:
ரஷியாவின் இக்லா-எஸ் (6.கி.மீ.)
இக்லா-1எம் (5 கி.மீ.)

ஓஎஸ்ஏ-ஏகே-எம் (10 கி.மீ.)
பெசோரா ஏவுகணைகள், எல்-70 துப்பாக்கிகள் (3.5. கி.மீ.)

பாகிஸ்தான் வான் பாதுகாப்பு சாதனம்...

ஹெச் க்யூ-9: சீனாவினிடம் இருந்து வாங்கப்பட்ட இந்த சாதனம் அதிகபட்சமாக 120 முதல் 300 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கி அழிக்கக் கூடியதாகும்.
ஸ்பாடா: பிரான்ஸிடம் இருந்து வாங்கப்பட்ட இந்த சாதனம் 20 முதல் 25 கி.மீ. தொலைவு வரையில் சென்று தாக்கவல்லது.