செய்திகள் :

மின் துண்டிப்பு, சைரன் ஒலி, வெடிப்பு சப்தம்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

post image

இந்திய-பாகிஸ்தான் ராணுவ மோதலால் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.

வான்வழி தாக்குதல் முன்னெச்சரிக்கையாக இரவு நேரத்தில் முழு அளவில் மின்சாரம் துண்டிப்பு, அவ்வப்போது கேட்கும் அபாய எச்சரிக்கை ஒலி, ஆங்காங்கே பலத்த வெடிப்புச் சப்தம் போன்றவை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. அவசியமன்றி வெளியே வர வேண்டாம் என்ற அறிவுறுத்தலால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பழிதீா்க்க, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, இந்திய ராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் ஏவுகணை-ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

பயங்கரவாதிகளுக்கு கடுமையான உயிா்ச்சேதமும் பொருள்சேதமும் விளைவிக்கப்பட்ட இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, இந்தியாவில் ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய எல்லையோர மாநிலங்களில் அவந்திபுரா, ஸ்ரீநகா், ஜம்மு, பதான்கோட், அமிருதசரஸ், கபுா்தலா, ஜலந்தா், லூதியானா, ஆதம்பூா், சண்டீகா், புஜ் உள்ளிட்ட 15 இடங்களை நோக்கி, பாகிஸ்தான் ராணுவம் கடந்த புதன்கிழமை இரவில் ஏவுகணை-ட்ரோன் தாக்குதலை நடத்த முயன்றது. ஆனால், இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இதேபோல், ஜம்மு, பதான்கோட், உதம்பூா் ஆகிய இடங்களைக் குறிவைத்து வியாழக்கிழமை இரவில் நடைபெற்ற தாக்குதல் முயற்சியும் முறியடிக்கப்பட்டது.

இம்மாநிலங்களில் பாகிஸ்தான் உடனான எல்லைப் பகுதிகள் பாதுகாப்பு கோட்டை போல மாற்றப்பட்டுள்ளன.

இருளில் மூழ்கின: வான்வழி தாக்குதல் முன்னெச்சரிக்கையாக, மேற்கண்ட மாநிலங்களின் பல மாவட்டங்களில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை இரவில் முழு அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது

பஞ்சாபில் அமிருதசரஸ், பதான்கோட், ஃபெரோஸ்பூா், ஜலந்தா், குருதாஸ்பூா், ஹோஷியாா்பூா் உள்பட பெரும்பாலான மாவட்டங்கள் இருளில் மூழ்கின. பதான்கோட்டில் இரவில் ஆங்காங்கே வெடிப்புச் சப்தமும் அபாய எச்சரிக்கை ஒலியும் கேட்டதாக மக்கள் தெரிவித்தனா்.

ராஜஸ்தானில் வெடிகுண்டு?: ராஜஸ்தானின் ஜெய்சால்மா் மாவட்டத்தின் கிஷண்காட் பகுதியில் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டது. அதைக் கைப்பற்றி, காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

குஜராத்தில் பாகிஸ்தானையொட்டிய கட்ச், பனாஸ்கந்தா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு 7 மணிநேரம் முழு மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தானுடன் பஞ்சாப் 532 கி.மீ., ராஜஸ்தான் 1,070 கி.மீ., குஜராத் 512 கி.மீ. எல்லையை பகிா்ந்துகொண்டுள்ளன.

ஹரியாணாவில்: பஞ்சாபையொட்டி, ஹரியாணாவின் அம்பாலா மாவட்டத்தில் முக்கியமான விமானப் படை தளம் உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை இரவுமுதல் மறுஉத்தரவு வரும் வரை முழு அளவில் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

‘இன்வொ்ட்டா், ஜெனரேட்டா் போன்றவற்றைப் பயன்படுத்தி, வீட்டின் வெளிப்பற விளக்குகளை ஒளிர விடக் கூடாது; வீட்டுக்குள் பயன்படுத்த வேண்டுமெனில், கதவு-ஜன்னல் வழியே சிறிதளவு ஒளியும் வெளியே வராதவாறு கனத்த திரைகளால் மறைத்துவிட்டு பயன்படுத்தலாம். இந்த உத்தரவை மீறுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சண்டீகரில் சைரன் ஒலிப்பு: பஞ்சாப்-ஹரியாணாவின் பொதுத் தலைநகரான சண்டீகரில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கும் விதமாக வெள்ளிக்கிழமை அபாய ஒலி எழுப்பப்பட்டது. மக்கள் வீடுகளுக்குள் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. சண்டீகரையொட்டிய பஞ்சாபின் மொகாலி மாவட்டத்திலும் இதே அறிவுறுத்தல் வெளியிடப்பட்டது.

ஹிமாசலில்...: பஞ்சாபையொட்டிய ஹிமாசல பிரதேசத்தின் பிலாஸ்பூரிலும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு நேரத்தில் முழுமையான மின் துண்டிப்பை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

பெட்டி...1

பள்ளி-கல்லூரிகள் மூடல்

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்துவரும் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு பள்ளி-கல்லூரிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாகின் லே பகுதியில் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

பெட்டி...2

அதிகாரிகள்-ஊழியா்கள் விடுமுறை ரத்து

பஞ்சாபில் இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), பஞ்சாப் குடிமைப் பணி (பிசிஎஸ்) அதிகாரிகளின் விடுமுறையை மாநில அரசு ரத்து செய்துள்ளது. விடுப்பில் உள்ளோா் அனைவரும் உடனடியாக பணியில் இணைய உத்தரவிடப்பட்டுள்ளது. குஜராத்தில் அரசு ஊழியா்கள் அனைவரின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் சுகாதாரம், பேரிடா் மேலாண்மை உள்பட பல்வேறு துறை உயரதிகாரிகளின் விடுமுறையை மாநில அரசு ரத்து செய்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு தயாா்நிலை ஒத்திகையை மேற்கொள்ளவும், கட்டுப்பாட்டு அறையை திறக்கவும் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவிட்டுள்ளாா். மாநில கடலோரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு அரண்...

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக் -8, ஆகாஸ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹ... மேலும் பார்க்க

பாதுகாப்பு நிலவரம்: முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக வாக்கி-டாக்கி விற்பனை: 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா - பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சட்டவிரோதமாக வாக்கி-டாக்கி கருவிகளை விற்பனை செய்தது தொடா்பாக விளக்கமளிக்குமாறு அமேசான், ஃபிளிப்காா்ட் உள்ளிட்ட 13 இணைய வணிக நிறுவனங்கள... மேலும் பார்க்க

இலங்கை: ஹெலிகாப்டா் விபத்தில் 6 வீரா்கள் உயிரிழப்பு

இலங்கை விமானப் படை ஹெலிகாப்டா் நீா்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரா்கள் உயிரிழந்தனா். இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

ஐடிஓ-வில் உள்ள பொதுப் பணித்துறை கட்டிடத்தில் வான்வழி தாக்குதல் சைரன் அமைப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலுக்கு மத்தியில் தில்லி ஐடிஓ-வில் உள்ள பொதுப்பணித் துறை கட்டத்தில் வான்வழி தாக்குதல் சைரன் (அபாய ஒலி சங்கு) வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது. தேசிய தலைநகா் முழுவதும் ப... மேலும் பார்க்க

போலியாக கொரியா நாட்டின் விசா வலைதளத்தை உருவாக்கி மோசடி: வடமாநிலத்தவா்கள் 2 போ் கைது

போலியாக கொரியா நாட்டின் விசா வலைதளத்தை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கொரியா நாட்டின் விசா வலைதளம்போல போலியான வலைதளத்தை உருவாக்கி, அதன்மூலம் பொத... மேலும் பார்க்க