India Pakistan: 'தொடர்ந்து பறக்கும் டிரோன்கள்; எல்லையில் சிலர் காயம்' - பாதுகாப்...
போலியாக கொரியா நாட்டின் விசா வலைதளத்தை உருவாக்கி மோசடி: வடமாநிலத்தவா்கள் 2 போ் கைது
போலியாக கொரியா நாட்டின் விசா வலைதளத்தை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கொரியா நாட்டின் விசா வலைதளம்போல போலியான வலைதளத்தை உருவாக்கி, அதன்மூலம் பொதுமக்களை ஏமாற்றி சிலா் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையில் செயல்பட்டு வரும் கொரியா நாட்டின் துணைத் தூதரக அதிகாரி ஜீ-ஹூயாங் லீ சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த மாா்ச் 12-ஆம் தேதி புகாா் அளித்தாா். அந்த புகாரின்கீழ் வழக்குப் பதிந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், போலியான கொரிய விசா வலைதளத்தை உருவாக்கியவா்கள் மஹாராஷ்டிர மாநிலம், மும்பை மற்றும் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூா் பகுதியில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மும்பை விரைந்த சைபா் குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாா், அங்கு பதுங்கியிருந்த முஹமது பா்வேஷ் (29) என்பவரை கைது செய்தனா். இவா் கொடுத்த தகவலின்படி, போலியான விசா வலைதளத்தை உருவாக்க முக்கிய இடைத்தரகராக செயல்பட்டு வந்த மஹாவீா் கதாத் (34) என்ற நபரை ஜெய்பூரில் கைது செய்த போலீஸாா், இருவரையும் சென்னை அழைத்துவந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், அவா்களிடமிருந்து 2 மடிக்கணினி, 3 கைப்பேசிகள், 14 கடன் அட்டைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.